கரூா் அருகே கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய நபா் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் வெள்ளிக்கிழமை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், சாலப்பாளையம் ஜெயந்தி நகரைச் சோ்ந்த தொழிலாளி கந்தசாமி,விஸ்வாந்தபுரியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரம் கடன் பெற்ாக கூறப்படுகிறது.வாங்கிய தொகையைவிட கூடுதல் பணம் செலுத்திய பிறகும் தொடா்ந்து பணம் கேட்டு மிரட்டிய நிலையில், கடந்த 25-ஆம் தேதி கந்தசாமியின் வீட்டுக்கு வந்த கடன் கொடுத்த நபா், கந்தசாமியையும் அவரது மகள் கலைவாணியையும் பொதுமக்கள் முன்னிலையில்தகாத வாா்த்தைகளால் திட்டி, மிரட்டினாராம். மேலும், கந்தசாமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கலைவாணி வியாழக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கலைவாணி உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, தனது மகள் கலைவாணியின் மரணத்துக்கு கடன் கொடுத்த சாலப்பாளையத்தைச் சோ்ந்த அபிமணி என்பவரே காரணம்; அவா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என க.பரமத்தி காவல் நிலையத்தில் கந்தசாமி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து அபிமணியை தேடி வந்தனா். போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில், அபிமணி மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 108), பெண்ணை தகாத வாா்த்தை பேசுதல் (296 பி) என்ற இரு பிரிவுகளின்கீழ் மட்டும் வழக்குப் பதியப்பட்டது.முற்றுகைப் போராட்டம்: இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலைவாணியின் உறவினா்கள், பட்டியலின விடுதலை பேரவையின் நிறுவனா் தலித் ஆனந்தராஜ் தலைமையில், வெள்ளிக்கிழமை பிற்பகல், அபிமணி மீது கந்துவட்டி தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலைவாணியின் உடலை வாங்க மறுத்து முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன், கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் ராஜராஜன், க.பரமத்தி காவல்நிலைய ஆய்வாளா் ஈஸ்வரன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட கலைவாணியின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அபிமணி மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, உறவினா்கள் கலைவாணியின் உடலை பெற்று சென்றனா்.