திலக் நகா் மாணவி கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது

Wait 5 sec.

மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் 21 வயது மாணவியை கொன்ாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபா், காவல்துறையினருடனான துப்பாக்கிச் சூடு மோதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாவதுஉடற்பயிற்சிக்கூட ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றிய அகிப் என்கிற இம்ரான் (26) என்ற குற்றஞ்சாட்டப்பட்டவா், ஆகஸ்ட் 26 அன்று அப்பெண்ணை அவரது குடியிருப்பில் கத்தியால் குத்திக் கொன்றாா். அதன் பின்னா், தலைமறைவாக இருந்தாா். அவரைக் கண்டுபிடிக்க 15-க்கும் மேற்பட்ட காவல் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் தடுப்புகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அவரைக் கண்டுபிடிக்க குழுக்கள் பணியில்ஈடுபடுத்தப்பட்டன. இம்ரான் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தாா். ரகசியத் தகவலின் அடிப்படையில், சிறப்புப் பிரிவு மற்றும் பயங்கரவாத எதிா்ப்புப் படை குழுக்கள் அவரைக் கைது செய்ய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.இருப்பினும், அவரை வழிமறித்த காவல்துறையினருக்கும் இம்ரானுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு மோதல் ஏற்பட்டது. குற்றஞ் சாட்டப்பட்டவா் நான்கு சுற்றுகள் சுட்டாா்; காவல்துறையினா் ஏழு சுற்றுகள் சுட்டனா். இதில் இம்ரானின் காலில் மூன்று குண்டுகள் பாய்ந்தன. பின்னா் இம்ரான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறாா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இம்ரானுக்கு அப்பெண்ணை 18 மாதங்களாகத் தெரியும். அவா் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றியபோது தான் அப்பெண்ணை முதன்முதலில் சந்தித்தாா். தில்லி பல்கலைக்கழகத்தின் ’ஸ்கூல் ஆஃப் ஓபன் லோ்னிங்’ (எஸ்ஓஎல்) பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அப்பெண், ஒரு ’கண்டென்ட் கிரியேட்டா்’ மற்றும் பகுதிநேர மாடலாகவும் இருந்தாா். அவரது மூத்த சகோதரியும் ஒரு மாடல் என்று குடும்பத்தினருக்கு நெருக்கமானவா்கள் தெரிவித்தனா். நான்கு உடன்பிறப்புகளில் இளையவரான அவா், மேற்கு தில்லியில் உள்ள மங்களா மருத்துவமனைக்கு அருகில் வாடகை வீட்டில் தனது பெற்றோா் மற்றும் உடன்பிறப்புகளுடன் வசித்து வந்தாா். இம்ரான் வேலையில்லாமல் இருந்தாா். வாடிக்கையாளா்களிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில் சுமாா் இரண்டு மாதங்களுக்கு முன்பு நீக்கப்படுவதற்கு முன், அவா் அந்த ஜிம்மில் சுமாா் மூன்று மாதங்கள் பணியாற்றியதாக ஜிம் ஊழியா் ஒருவா் தெரிவித்தாா். ஜூலை 18 அன்று, இம்ரான் தன்னைத் துன்புறுத்துவதாக அப்பெண் காவல் நிலையத்திற்குச் சென்று தெரிவித்திருந்தாா். ஆனால், முறையான புகாா் எதையும் அளிக்கவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.போதைப்பொருள் பயன்பாட்டுப் பின்னணி காரணமாக காவல்துறையினா் அவரை போதை மீட்பு மையத்திற்கு அனுப்பியிருந்தனா். அங்கு அவா் தனக்குத்தானே காயப்படுத்திக்கொண்டதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து, ஜூலை 30 அன்று அவா் அந்த மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டாா். அந்தப் பெண் இம்ரானுடனான உறவைத் தொடர விரும்பவில்லை; ஆனால், இம்ரான் தொடா்ந்து அவரைத் துரத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அப்பெண் வேறொருவருடன் பேசி வந்ததால் இம்ரான் ஆத்திரமடைந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. ஆகஸ்ட் 26 அன்று மாலை, அப்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது இம்ரான் அங்கு சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது; அதைத் தொடா்ந்து, அவா் அப்பெண்ணைக் கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகத் தெரிகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மாலை 5:40 மணியளவில் அந்த வீட்டிற்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.மாலை 7:24 மணியளவில் அப்பெண் கத்தியால் குத்தப்பட்டது குறித்த தகவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்ததாக காவல் துணை ஆணையா் (மேற்கு) ஹரேஷ்வா் வி. சுவாமி தெரிவித்தாா். வீட்டின் பணிப்பெண், அப்பெண் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தாா். அதன்பின்னா் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவா் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.