உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. இணையமும், கைப்பேசியும் இருந்துவிட்டால், உலகத் தகவல்கள் கைக்குள் அடக்கம். அது சரி? இணையதளத்தில் லேட்டஸ்ட் தகவல்கள் என்னென்ன வந்துள்ளது என்பதை அறியலாமா?வை ஃபை பயனரா நீங்கள்..! பெரும்பாலான வீடுகளில் வைஃபை இணைய இணைப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த இணைப்பில் உங்கள் அனுமதியின்றி வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். சில வழிமுறைகளையும் கையாள வேண்டும். வைஃபையின் வேகம் குறைந்தால், கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் வைஃபையோடு எந்தச் சாதனமும் இணைக்காவிட்டால், அதில் உள்ள விளக்கு விட்டுவிட்டு எரியும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் பட்டியலை சரிபார்க்கவும். தெரியாத சாதனம் இணைந்திருந்தால் வைஃபையின் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றவும். வலுவான கடவுச்சொல் முக்கியம். இணையத்திலேயே வாட்ஸ் ஆப் கால் பேசலாம்!கணினிகள், மடிக்கணினிகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் அவற்றிலேயே இனி நேரடியாக ஆடியோ, விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. அழைப்பில் தேவையற்ற பின்னணி சத்தங்களைக் குறைக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே கணினிக்கும் மாற்றிக் கொள்ளவும், மீண்டும் கைப்பேசிக்கு மாற்றவும் முடியும். குழு அழைப்புகளைக் கட்டுப்படுத்த காத்திருப்பு வசதியும், விடியோ அழைப்புகளின்போது தெளிவான காட்சியை அளிக்கும் 'க்யூக் ஹெச்.டி.' அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. கைப்பேசி சார்ஜ் ஆகவில்லையா?கைப்பேசி சார்ஜ் ஆகாமல் இருப்பதற்கு பேட்டரி பழுதாகிவிட்டது என்று உடனடியாக முடிவு செய்ய வேண்டாம். பல நேரங்களில் சார்ஜர், சார்ஜிங் கேபிள், சார்ஜிங் போர்ட், மின் இணைப்பு உள்ளிட்டவற்றாலும் சார்ஜிங் பிரச்னை ஏற்படலாம்.முதலில் சார்ஜர், கேபிள்களை சரிபார்க்க வேண்டும். இதற்காக வேறு சார்ஜர் அல்லது கேபிளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.அழுக்கு, தூசி போன்றவை போர்ட்டில் சேர்ந்திருந்தால் சார்ஜிங் இணைப்பு சரியாக ஏற்படாமல் போகலாம். அதிக வெப்பம் ஏற்பட்டாலும் சார்ஜிங் பாதிக்கப்படலாம். கைப்பேசி அதிகமாக சூடாக இருந்தால், சிறிது நேரம் பயன்படுத்தாமல் வைத்து, பின்னர் சார்ஜ் செய்ய முயற்சிக்கலாம். தொடர்ந்து சார்ஜ் ஆகவில்லை என்றால் மட்டுமே பேட்டரி அல்லது சார்ஜிங் போர்ட்டில் கோளாறு இருக்கக் கூடும். அசத்தப் போகும் 'எக்ஸ்'சமூக ஊடகத் தளமான 'எக்ஸ்' செயலியை அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் சேவைகளையும் வழங்கும் 'எல்லாவற்றுக்குமான செயலி' யாக மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க்கின் லட்சியம். அந்த இலக்கை நோக்கி முக்கிய முன்னேற்றமாக அனைத்துக் கட்டணச் சந்தாதாரர்களுக்கும் வங்கிச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.'எக்ஸ் மணி' முறையில் பயனர்கள் பிற பயனர்களுக்கு பணம் அனுப்பவும், கட்டணங்களைச் செலுத்தவும், வங்கிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும், காசோலைகளை அஞ்சல் மூலம் அனுப்பவும் முடியும். சமூக ஊடகத் தளத்திலேயே முழுமையான நிதி சேவைகளை வழங்கும் இந்த முயற்சி நியூஜெர்சியில் உள்ள 'கிராஸ் ரிவர் பேங்க்' வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. வைப்புகளுக்கு அமெரிக்காவின் 'பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' வாயிலாக, 2.50 லட்சம் டாலர் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், வைப்புத்தொகைகளுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வரை வருமானம் வழங்கப்படும் என்று 'எக்ஸ் மணி' தெரிவித்துள்ளது. சீனாவின் 'விசேட்' செயலியைப் போன்ற தகவல் பரிமாற்றம், பொருள்கள் வாங்குதல், பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் செயலியாக 'எக்ஸ்'-ஐ மாற்ற வேண்டும் என்பதே எலான் மஸ்க்கின் நோக்கமாகும். இந்த வங்கிச் சேவை அறிமுகமானது எலன் மஸ்க்கின் எதிர்கால எண்ம உலகத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) , ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை முழுமையாக மாற்றப்போகும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், மனிதர்கள் பயன்படுத்தும் உற்பத்தித் திறனைவிட அதிக அளவில் பொருள்கள், சேவைகள் உற்பத்தி செய்யப்படும் நிலை உருவானால், 2036-ஆம் ஆண்டுக்குள் பணத்தின் முக்கியத்துவமும் பெருமளவில் குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.மழை வந்தால் கவனம்...மழைக்காலங்களில் காற்றில் உள்ள அதிக ஈரப்பதமானது மின்னணுச் சாதனங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. மழைநீர் மின்னணுச் சாதனத்தின் உள்பாகங்களை அடைவதால், சர்க்யூட் போர்டுகள், உலோகப் பாகங்கள் துருப்பிடித்து மின்கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் கைப்பேசிகள், மடிக்கணினிகள் பாதிப்புக்குள்ளாகும். இந்த ஈரப்பதத்தால் மின்சுற்றுகள் பழுது, சாதனங்களின் செயல்திறன் குறைவு, ஆயுள்காலம் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். பேட்டரியின் சார்ஜும் வேகமாக தீர்ந்துவிடும்.அதிகமான ஈரப்பதம் சாதனத்தினுள் நுழைந்து மின்சுற்று அல்லது ஹார்டு டிரைவைச் சேதப்படுத்தினால், அதில் உள்ள மதிப்புமிக்க கணினி, கைப்பேசிகளின் தரவுகள் நிரந்தரமாக இழக்கப்பட்டு, மீண்டும் பெற முடியாத நிலை ஏற்படலாம். ஒரு மின்னணுச் சாதனத்துக்குள் தண்ணீர் அல்லது ஈரப்பதம் புகுந்திருப்பதை அறிந்தால், உடனடியாக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். முதலில் சாதனத்தை அணைத்து, மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். பின்னர் சாதனத்தை ஓர் உலர்ந்த துணியால் துடைத்து, மின்விசிறியின் உதவியுடன் மட்டுமே உலர விடவும். ஹேர் ட்ரையர் போன்றவற்றின் சூடான காற்றைப் பயன்படுத்த வேண்டாம். உள்ளே இருக்கும் ஈரப்பதம் முழுமையாக உலரும் வரை குறைந்தபட்சம் ஒரு நாளாவது சாதனத்தை இயக்கவோ அல்லது மின்னேற்றம் செய்யவோ வேண்டாம். மழையில் வெளியே செல்லும்போது நீர் புகாத வகையிலான பைகள் அல்லது உறைகளைப் பயன்படுத்துங்கள். மடிக்கணினிப் பைகளில் சிறிய சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை வைத்தால், உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும்.ஈரமான கைகளால் சார்ஜிங் இணைப்பான்கள் அல்லது போன் போர்ட்களைத் தொட வேண்டாம். தவறுதலாக சாதனத்தின் மீது நீர்த்துளிகள் விழுந்தால், உடனடியாக அதை உலர்ந்த துணியால் மெதுவாக துடைக்க வேண்டும். வீட்டு உபயோகப் பொருள்களைப் பாதுகாக்க, அவற்றை வீட்டில் ஈரப்பதம் குறைவாக உள்ள இடங்களில் வைப்பது அவசியம். சாதனங்களைச் சுற்றி சரியான காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும், அவற்றை நேரடியாக ஈரமான தரையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மரத்தாலான ஸ்டாண்டுகள் அல்லது மேடைகளில் வைக்கலாம்.மழைக்காலத்தில் மின்சார விநியோகத்தில் சிறிதளவு ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும் என்பதால், நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருக்கும்போது மின்னணு உபகரணங்களை மின் இணைப்பிலிருந்து துண்டித்து வைப்பது அவற்றைப் பாதுகாக்கும். -தி.நந்தகுமார்