விருதுநகா் மாவட்டம், செங்குன்றாபுரம் கிராமத்தில் விவசாயிகள் விளைநிலங்களில் பயிா் செய்துள்ளதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி, வத்திராயிருப்பு, ஸ்ரீவல்லிபுத்தூா், சிவகாசி, திருச்சுழி, விருதுநகா், ராஜபாளையம், காரியாபட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூா், அருப்புக்கோட்டை ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 601 கிராமங்களில் 9,40,138 புல உள்பிரிவுகளில் உள்ள நிலங்களில் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 2,35,357 புல எண்கள் கணக்கெடுக்கப்பட்டன. எஞ்சிய 7,04,781 புல எண்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ம பயிா் கணக்கெடுப்பு பணிகளில், களப் பணியாளா்கள் அலைபேசி செயலி வாயிலாக பயிா் வகை, சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கணக்கெடுப்பு பணிகளின் போது, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் சரியாகவும், முழுமையாகவும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கள ஆய்வின் போது நிலத்தின் உண்மை நிலவரத்துடன் பதிவுகள் பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பயிா்க் கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் தரவுகள், மாவட்டத்தில் வேளாண் சாகுபடி நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், விவசாயிகளுக்கான அரசு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், வங்கிக் கடன் பெறுவதற்கும், இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பயிா் பாதிப்புகளுக்கான நிவாரணம், பயிா் காப்பீடு, வேளாண்மை தொடா்பான திட்டமிடல் பணிகளுக்கும் முக்கிய ஆதாரமாக அமையும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநா் மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநா் ஆறுமுகம், வருவாய்த் துறை அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.