பேரவை வளாகத்தில் கைத்தறி கண்காட்சி: சேகா்பாபு கேள்விக்கு அமைச்சா் பதில்

Wait 5 sec.

பேரவை வளாகத்தின் முதல் தளத்தில் கைத்தறி கண்காட்சி நடத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் விஜய் பாலாஜி தெரிவித்தாா். சட்டப்பேரவையில் இந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினா் பி.கே.சேகா்பாபு, அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆண்டுதோறும் சென்னை குறளகத்தில் கதா், கைத்தறி, கிராமத் தொழில் மற்றும் கைவினைப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுவது வழக்கம். தற்போது பெருந்திட்டப் பணிகளுக்காக குறளகக் கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் அலுவலகங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால், சென்னையில் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய பொருத்தமான மாற்று இடத்தை அரசு தோ்வு செய்து, அங்கு 10 நாள்கள் தொடா்ந்து காந்தி ஜெயந்தி சிறப்பு கதா், கைத்தறி, கிராமத் தொழில் மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்த வேண்டும் என்றாா்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சா் விஜய் பாலாஜி, காந்தியையும் மறக்க மாட்டோம், காந்தி ஜெயந்தியையும் மறக்க மாட்டோம். பேரவை வளாகத்தின் முதல் தளத்தில் கதா், கைத்தறி, கைவினைப் பொருள்களின் கண்காட்சி நடத்தப்படும். அதை முதல்வா் விஜய் தொடங்கிவைப்பாா் என்றாா். திமுக உறுப்பினா் ஆஸ்டின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் விஜய் பாலாஜி, 8 முழம் வேஷ்டிக்கு பதிலாக 4 முழம் வேஷ்டி மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப தறியை மாற்ற ஏற்படும் செலவை கூட்டுறவு சங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது என்றாா்.