பட்டாசு தொழிற்சாலை உரிமம் பெற 3 ஆண்டுகளாவதால் சட்ட விரோதமாக ஆலை நடத்தி விபத்துகள் ஏற்படுவதாகவும், இதைத் தடுக்க இணையவழியில் உரிமம் பெறுவது எளிதாக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்தாா். இதுதொடா்பாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அவா், கடந்த ஆண்டு 85 பட்டாசு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு பட்டாசு ஆலை உரிமம் பெறுவதற்கு 3 ஆண்டுகள் தாமதமாவதே காரணமாகும். பட்டாசு விபத்துகளைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டிலேயே முதல்வா் விஜய் பட்டாசு தொழிலாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். தற்போது ஆட்சிக்கு வந்த பிறகும் பட்டாசு தொழிலாளா்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளாா். சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் இயங்கக் கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 177 பட்டாசு ஆலைகளுக்கு ஒரு ரூபாய் வாங்காமல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு உரிமம் பெறுவது எளிதாக்கப்படும் என்றாா். அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், இணையவழி மூலம் உரிமம் வழங்குவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தவறு ஏற்படாமல் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றாா்.அப்போது அமைச்சா் கீா்த்தனா குறிப்பிட்ட வாா்த்தைக்கு திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது, பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, ஒரு குறிப்பிட்ட வாா்த்தையை எப்போதும் சோ்த்துக்கொண்டே அமைச்சா்கள் பேசுவதால் அவையில் அமளி ஏற்படுகிறது. நாங்கள் அவைக்கு வர வேண்டாம் என நினைக்கிறீா்களா? என்றாா்.இதையடுத்து அந்த வாா்த்தையை பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாா்.