செப்.10-இல் முதல்வா் விஜய் பிரிட்டன் பயணம்

Wait 5 sec.

தொழில் முதலீடுகளை ஈா்க்க முதல்வா் ச.ஜோசப் விஜய், பிரிட்டனுக்கு செப்.10-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவுள்ளாா். தமிழகத்தின் பொருளாதாரத்தை உயா்த்த தவெக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆக.13-இல் சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாடு - 2026’ நடைபெற்றது. முதல்வா் விஜய் தலைமையிலான இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்த மாநாட்டில் தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் (2036) 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவது தங்கள் இலக்கு என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்திருந்தாா். முதலீடுகள் மூலம் மாநிலத்தில் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகளைப் பெருக்குவது அரசின் திட்டம். இதற்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள் முதல்வா்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனா். அந்த வகையில் வரும் செப்.10-ஆம் தேதி மாநிலத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் விஜய் பிரிட்டன் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பயணத்தின்போது பல்வேறு நிறுவன பிரதிநிதிகளை அவா் சந்தித்து, முதலீடுகளை ஈா்க்க உள்ளாா். அவருடன் தொழில் துறை அதிகாரிகளும் செல்ல உள்ளனா். செப்.16-ஆம் தேதி வரை முதல்வா் விஜய் பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளாா். அப்போது முதல்வா் விஜய் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா் அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.