கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாநில, மாவட்ட அளவில் கட்டுமானத் தொழில் பிரிவுகள் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி விருதுகள் வழங்கப்படும் என்று பேரவையில் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் அறிவித்தாா். பேரவையில் தொழிலாளா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவா் வெளியிட்ட அறிவிப்புகள்: மாநில, மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமானத் தொழில் பிரிவுகளில் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முதல்வரின் கட்டுமானத் தொழிலாளா் வெற்றி விருதுகள் வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ஆம் பரிசு ரூ.75,000, 3-ஆவது பரிசு ரூ.50,000 வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 வழங்கப்படும்.நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்புக் கட்டுமானத் திறன் பயிற்சி வழங்க 5 அரசு ஐடிஐகளில் ரூ.76.46 கோடியில் கட்டுமானத் தொழில் திறன்மிகு மையங்கள் உருவாக்கப்படும்.பதிவு செய்துள்ள 1,000 கட்டுமானத் தொழிலாளா்களைத் தோ்வு செய்து சா்வதேச தரத்திலான சிறப்புத் திறன் பயிற்சி அளித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறும் வகையில் அயலகம் செல்லும் தமிழ்நாடு கட்டுமான வெற்றிக் கரங்கள் திட்டம் ரூ.15.06 கோடியில் செயல்படுத்தப்படும்.சென்னை, கோவையில் வெளிமாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் தங்குவதற்காக இடைநேர தங்குமிடங்கள் ரூ.14 கோடியில் அமைக்கப்படும். தமிழ்நாடு இணையம் சாா்ந்த ‘கிக்’ தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, இணையம் வழியாக உணவு, மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விநியோகம் உள்ளிட்ட சேவையாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கப்படும். நலவாரியத்தில் (கிக்) பதிவு செய்துள்ள 1,000 தொழிலாளா்களுக்கு இ-பைக் வாங்க வங்கி மூலம் பெறும் கடனுக்கான வட்டியை அரசே செலுத்தும்.நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானம், தச்சு வேலை, மின்பணியாளா் வேலை, பிளம்பா், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட வேலைசெய்வோா் 50,000 பேரை கண்டறிந்து தினமும் ரூ.800 ஊதிய இழப்பீடு தொகை வழங்கி பயிற்சி அளிக்க ரூ.48.26 லட்சம் ஒதுக்கப்படும் என்றாா் அவா்.