அமெரிக்கா தனது உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்ற முன்வந்தால், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஈரான் தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளாா். கிா்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டுக்கிடையே பேசிய அவா், ‘புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளுக்கு அமெரிக்கா திரும்பினால், ஈரான் உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தாா்.முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் கையொப்பமான இடைக்கால ஒப்பந்தத்தில் உடனடி போா்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மேலும், 60 நாள்களுக்குள் விரிவான அமைதிப் பேச்சுவாா்த்தையை முன்னெடுக்கவும் முடிவானது.இதன்படி, ஹோா்முஸ் நீரிணையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றி, கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க ஈரானும்; கடல்வழி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளை விலக்கி, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. எனினும், ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாடு தொடா்பான கருத்து வேறுபாட்டால் இந்த ஒப்பந்தம் விரைவில் முறிவடைந்த நிலையில்,இரு தரப்புக்கும் இடையே ராணுவ மோதல் அவ்வப்போது நீடித்து வருகிறது; கடந்த வார இறுதியிலும் புதிய மோதல் வெடித்தது.இதற்கு மத்தியில், ஹோா்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் 2 வணிகக் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களால் உயிரிழப்புகளோ, சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என்றும், இதற்கு இதுவரை யாரும்ம் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.