புதுக்கோட்டை அரசுப் பேருந்தில் ஏறிய பழங்குடியின மாணவிகளை நடத்துனர் கீழே தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை - திருச்சி சாலையில் ரெங்கம்மாள்சத்திரம் சத்திரம் அருகே கீரனூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற அரசுப் பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ஏறியுள்ளனர். அப்போது கூட்டம் அதிகம் இருப்பதாகக் கூறி அந்த மாணவிகளை நடத்துனரும் பேருந்தில் இருந்தவர்களும் கீழே இறங்கச் சொல்லியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடத்துனர் அந்த மாணவிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்க கதவைத் திறந்துள்ளார். அப்போது மாணவிகள் வரிசையாக கீழே விழுந்துள்ளனர். இதில் 8 மாணவிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவியின் ஒருவரின் காலில் பேருந்தின் டயர் ஏற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில் மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் காயமடைந்ததைத் தொடர்ந்து அந்த பழங்குடியின கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.ரெங்கம்மாள்சத்திரம் அருகே அரசுப் பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Eight school girls injured allegation that the conductor pushed them from pudukottai govt bus