திருத்தணி முருகன் கோயிலில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லதடை! இன்று முதல் அமல்!

Wait 5 sec.

திருத்தணி: திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் செல்போன், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை அமலுக்கு வந்தது.தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கிய கோயில்களில், மூலவர், உற்சவர் மற்றும் கோயிலின் உள்பிரகாரங்களில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில், செல்போன், கேமரா, டேப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல செப்.1 முதல் தடை விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் இந்தத் தடை செவ்வாய்க்கிழமை காலை முதல் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களுடன் கொண்டு வரும் செல்போன், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு இடங்களில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒப்படைத்து, ஒரு செல்போனுக்கு ரூ. 5 என்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பின்னர், அவர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படும். சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு திரும்பியதும், ரசீதை காண்பித்து தங்களது செல்போன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலுக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில், கோயில் நுழைவு பகுதிகளில் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்புப் பெட்டகங்களில் பக்தர்களின் பொருள்களை முறையாகப் பெற்று, ரசீது வழங்கி, தரிசனம் முடிந்து திரும்பும்போது அவற்றை ஒப்படைக்கும் வகையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதுடன், மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் புகைப்படம், விடியோ எடுப்பதைத் தடுப்பதற்கும், பக்தர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் அமைதியாக சுவாமி தரிசனம் செய்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் க.ரமணி, அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.