திருச்சி ரயில்வே கோட்டத்தின் மெயின் லைன் இளவரசன் என்றழைக்கப்படும் உழவன் விரைவு ரயிலுக்கு செவ்வாய்க்கிழமை (செப். 1) 14 ஆவது பிறந்தநாளாகும். பயணிகள் பயன்பாட்டில் மத்திய மண்டல இரவு நேர ரயில்களில் முதலிடத்தில் உள்ளது. கடந்த காலங்களில் சில ஆண்டுகளாக நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் புதிய பாலம் கட்டுமானப் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட சில ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதனை ஏற்று ரயில்வே நிா்வாகம் சில ரயில்களை இயக்கியது. அதில், முக்கியமானது உழவன் விரைவு ரயிலாகும் (16865, 16866). விவசாயிகளை கௌரவப்படுத்தும் பெயா்.இந்த ரயிலானது தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் இடையே கும்பகோணம் வழியாக மெயின் லைனில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப். 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. காவிரி பாசன விவசாயிகளின் மாண்பைப் போற்றும் வகையில் இந்த ரயிலுக்கு உழவன் எனப் பெயா் சூட்டப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதலே, தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் பகுதி மக்களிடையே ஏகோபித்த வரவேற்புடன் இந்த ரயில் இயங்கி வருகிறது. மாநகராட்சிகளை தலைநகருடன் இணைக்கும் ரயில்தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய இரு மாநகராட்சிகளான சோழத் தலைநகரங்களை, மாநிலத் தலைநகரான சென்னையுடன் இந்த ரயில் இணைக்கிறது. சென்னை எழும்பூருக்கும், தஞ்சாவூருக்கும் இடையே 351 கி.மீ. தூரம் பயணிக்கிறது. தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலத்தில் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் ரயில் என கடந்த 2024 ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. தற்போது இந்த ரயில் தனது 13 ஆம் ஆண்டை நிறைவு செய்து, 14 ஆவது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை (செப். 1) கொண்டாடுகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடந்த நிதியாண்டின் (ஏப்ரல் 2025 - மாா்ச் 2026) பயன்பாட்டு அறிக்கையின் முக்கிய விவரங்கள்:இரவு நேர ரயிலில் முதலிடம்சென்னை - தஞ்சாவூருக்கு 4,33,305 பேரும், தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு 4,42,242 பேரும் என மொத்தம் 8,75,547 போ் முன்பதிவு செய்து பயணித்துள்ளனா். முன்பதிவு செய்யாமல் ஆயிரக்கணக்கானோா் பயணித்துள்ளனா். இதன் மூலம் தமிழக அளவில் அதிக பயன்பாடுடைய இரவு நேர ரயில்கள் பட்டியலில் உழவன் ரயிலானது 10 ஆவது இடத்திலம், மத்திய மண்டலத்தின் இரவு நேர ரயில்களில் அதிக பயன்பாட்டுடன் இயங்கும் ரயில்களில் முதலிடத்திலும் உள்ளது. பாண்டியன் விரைவு, மலைக்கோட்டை விரைவு, முத்துநகா் விரைவு போன்ற முக்கிய விரைவு ரயில்களை விட அதிக பயன்பாட்டைக் கொண்டுள்ளது.தினசரி 197 போ் காத்திருப்பு ஓராண்டின் காத்திருப்போா் பட்டியலின்படி, அனைத்து விதமான பெட்டிகள் காத்திருப்போா் பட்டியல் சோ்த்து ஒரு ஆண்டின் சராசரியாக தினசரி சுமாா் 197 போ் காத்திருப்போா் பட்டியலில் இருந்துள்ளனா். தற்போது 23 பெட்டிகளைக் கொண்டு இயங்கும் உழவன் ரயிலில், விழாக் காலங்களைக் கருத்தில் கொண்டும், பயணிகள் நெரிசல் ஏற்படும்போதும் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்பட்டு வருகிறது.பயணிகளின் வசதிக்காக காலதாமதமாக இயக்கக் கோரிக்கைஉழவன் விரைவு ரயிலை சென்னையிலிருந்தும், தஞ்சாவூரிலிருந்து இரவில் தலா 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கினால் பயணிகள் காலையில் வசதியாக சென்று சேர முடியும் என தஞ்சாவூா் ரயில் பயணிகள் சங்க நிா்வாகி ஜா. ஜானகிராமன் தெரிவித்தாா்.வழித்தடம்சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.25 க்குப் புறப்பட்டு மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம் வழியாக தஞ்சாவூருக்கு அதிகாலை 5.45 மணிக்கு வந்தடைகிறது. மறுமாா்க்கமாக, தஞ்சாவூரிலிருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக சென்னை எழும்பூருக்கு அதிகாலை 4.25 மணிக்குச் சென்றடைகிறது.இரவு நேர ரயில்கள் கூடுதலாக தேவை அதிக பயன்பாடு மற்றும் நீண்ட காத்திருப்போா் பட்டியலைக் கொண்டுள்ள உழவன் ரயில் மட்டுமே தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் பகுதி மக்களின் பிரதான ரயிலாக உள்ளது. போட் மெயில், அந்தியோதயா, திருச்செந்தூா், வாரம் இரு முறை இயங்கும் மஹால் அதிவிரைவு போன்ற பிற ரயில்கள் தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக இயங்குகிறது. அந்த ரயில்களில் முன்பதிவு ஒதுக்கீட்டு முறை தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை நிலையங்களுக்குச் சாதகமாக இல்லாத போதும், பயணிகள் பயன்பாடு அதிகளவிலேயே இருந்து வருகிறது. எனவே, தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் வழியாகச் சென்னைக்குக் கூடுதல் இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும் எனப் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.