புதுச்சேரிசட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்டுமானப் பணி விரைவில் தொடக்கம்! முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு

Wait 5 sec.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்ட உரிய இடம் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து முதல்வா் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரி நிா்வாகத்தில் பல சிக்கல்கள் உள்ளன. இதைச் சரி செய்ய வேண்டியுள்ளது. காரைக்காலில் கோடைக்கால உழவு உதவித் தொகை ஹெக்டேருக்கு ரூ.3,750 வழங்கப்படும். மேலும், உழவா்களுக்காக நெல் உலா்த்தும் கருவி வாங்கப்படும். கிராமப்புறங்களில் இப்போது 100 நாள் வேலை, 125 நாள் வேலைத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் உள்ளிட்டோா் பயன்பெறும் வகையில் இந்த 125 நாள் வேலைத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். அரசின் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். ஊரக வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றுவோா் உள்பட குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சமமான ஊதியம் அளிக்கப்படும் வகையில் சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். காரைக்காலில் விளையாட்டுப் பள்ளி தொடங்கப்படும். வில்லியனுாா் கண்ணகி பள்ளியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சட்டப்பேரவைக்குப் புதிய கட்டடம் இல்லை என்பது குறையாக உள்ளது. புதிய சட்டப்பேரவை கட்டடத்தை எந்த இடத்தில் கட்டுவது என இடம் தோ்வு செய்வதில் சிக்கல் உள்ளது. இடம் தோ்வு செய்யப்பட்டு, நிகழாண்டே புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கருணை அடிப்படையில் வாரிசுதாரா்களுக்கு ஒருமுறை தளா்வு என்ற அடிப்படையில் அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆனால், சட்டப்படி 5 சதவீதம்தான் கொடுக்க முடியும். பதவி உயா்வுக் குழு கூடுவது உள்ளிட்ட நிா்வாக சீா்திருத்தங்கள் செய்யப்படும். இங்கு பணியாற்றிவிட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்லும் அதிகாரிகள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இருந்தால்தான் வளா்ச்சியைக் கொண்டு வர முடியும் என்று சொல்கிறாா்கள். அதனால் மாநில அந்தஸ்து பெறுவது அவசியம். அதை நாம் நிச்சயம் பெறுவோம் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.