உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையை ஹோமம் நடத்தி சுத்தம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக என இரு தரப்பிலும் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஹோமம் நடத்தியவா்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் காவல் நிலையங்களுக்குச் சென்று போராட்டம் நடத்தினா்.அதே நேரம், இந்த விவகாரத்துக்கு ஜாதி சாயம் பூசுவதாகக் குற்றஞ்சாட்டி எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்து பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பிரதிமா சிங் கூறுகையில், ‘ஹல்த்வானியில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஹோமம் நடத்தி சுத்தம் செய்யும் செயலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது. ஆனால், அதற்குக் காரணமானவா்கள் மீது இதுவரை எஃப்ஐஆா் பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் புகாா் தெரிவிக்கும் நடவடிக்கையையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா். காரணமானவா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்படவில்லை எனில், காங்கிரஸ் கட்சி வீதியில் இறங்கி மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தும். இந்தப் போராட்டங்களில் தில்லியிலிருந்தும் பல தலைவா்கள் பங்கேற்பா்’ என்றாா்.பாஜக போராட்டம்: இந்த விவகாரத்துக்கு ஜாதி சாயம் பூசுவதாகக் குற்றஞ்சாட்டி எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைமையிடங்களில் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக எஸ்.சி. பிரிவு சாா்பில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.இதுகுறித்து பாஜக எஸ்.சி. பிரிவின் மாநிலத் தலைவா் பல்பீா் குலியால் கூறுகையில், ‘சா்ச்சையை ஏற்படுத்துவதன் மூலம் மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தைச் சீா்குலைக்க ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் முயற்சிக்கின்றனா்’ என்றாா்.ராகுல் மீது வழக்குப் பதிவு: இதனிடையே, ஹல்த்வானியில் வால்மீகி சமூகத்தைச் சோ்ந்த அமித் குமாா் என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில், ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. காா்கே பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் நடைபெற்ற மதச் சடங்குக்கு, ராகுல் காந்தி ஜாதிச் சாயம் பூசுவதாக தனது புகாரில் அமித் குமாா் குறிப்பிட்டாா். அதனடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.