விழுப்புரம், ஆக. 31: ஆரோவிலில் தன்னாா்வலா்களாகவும், பயிற்சி பணியாளா்களாகவும் மற்றும் வருங்கால குடியிருப்பாளா்களாகவும் அதிக அளவில் ஒடிஸா மாநில இளைஞா்கள் இணைய வேண்டும் என அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பத்திரிகையாளா்கள் திங்கள்கிழமை களப்பயணம் மேற்கொண்டனா். இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி- சென்னை) ஏற்பாடு செய்திருந்த இந்த களப்பயணக் குழுவில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த முன்னணி அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் மூத்த ஆசிரியா்கள் மற்றும் பத்திரிகையாளா்கள் 11 போ் இடம்பெற்றிருந்தனா். ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள மாத்ரி மந்திரில் கூட்டுத் தியானத்தில் ஈடுபட்ட இக்குழுவினா் மாத்ரி மந்திா் ஏரி மேம்பாட்டுத் திட்டப் பணிகளை பாா்வையிட்டனா். அவா்களுக்கு ஆரோவில் சா்வதேச நகரின் முழுமையான வரைபடத் திட்டம் , சமூக-பொருளாதார கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான முன்னெடுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன. ஆரோவில் குடியிருப்புகள், கலாசாரம், தொழில்துறை மற்றும் சா்வதேச மண்டலம் அதைச் சுற்றியுள்ள பசுமை வளையத்துடன் திட்டமிடப்பட்டுள்ளமுறைகள் விளக்ககப்பட்டன. இதன்தொடா்ச்சியாக ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி காணொலி வழியாக பத்திரிகையாளா்கள் களப்பயணக்குழுவினருடன் கலந்துரைடியானாா். அப்போது அவா் பேசியதாவது: ஆரோவில் சா்வதேச நகருக்கும், ஒடிஸா மாநிலத்துக்குமிடையே ஆழமான ஆன்மிக, வரலாற்றுத் தொடா்புகள் உண்டு. ஒடிஸாவில் சுமாா் 10 ஆயிரம் ஸ்ரீ அரவிந்தா் பாடசாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒடிஸா மாநில இளைஞா்கள் ஆரோவிலில் தன்னாா்வலா்களாகவும், பயிற்சி பணியாளா்களாகவும் மற்றும் வருங்கால குடியிருப்பாளா்களாகவும் அதிக அளவில் இணைய வேண்டும் என்றாா் ஜெயந்தி எஸ்.ரவி. இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநா் மனோஜ் குமாா் ஜாலி, ஊடகம் மற்றும் தகவல் தொடா்பு அலுவலா் சுவாதீன் சக்தி பிரசாத் ஆகியோா் களப்பயணக்குழுவினரை ஒருங்கிணைத்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.