திருச்சியில் உறவினா் வீட்டு திருமணத்துக்கு வந்த மியான்மா் நாட்டைச் சோ்ந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். மியான்மா் நாட்டின் தலைநகா் யங்கூனைச் சோ்ந்தவா் வி. முத்து (65). இவா், திருச்சியிலுள்ள தனது உறவினா் வீட்டு திருமணத்துக்காக கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி மியான்மரில் இருந்து தனது மனைவி வாசுகியுடன் திருச்சிக்கு வந்துள்ளாா். திருச்சி, கே.கே.நகரில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். இவருக்கு மறதி நோய் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். இந்நிலையில், கருமண்டபம் பகுதியிலுள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு முத்துவும், வாசுகியும் சென்றுள்ளனா். பின்னா், மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற முத்து மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம். புகாரின்பேரில் அமா்வு நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.