கூடலூரின் பிரச்னைகளை தீா்க்க வலியுறுத்தி 2 இளைஞா்கள் சென்னை நோக்கி நடைப்பயணம்

Wait 5 sec.

பிரிவு 17 நிலப் பிரச்னை, ஊருக்குள் நுழையும் வன விலங்குகளை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கூடலூரின் முக்கிய கோரிக்கைகளை தீா்க்க வலியுறுத்தி இரண்டு இளைஞா்கள் சென்னையை நோக்கி நடைப்பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தொகுதியில் அண்மையில் இரண்டு தொழிலாளா்களைப் புலி தாக்கிக் கொன்றது. மேலும், இப்பகுதியில் வன விலங்குகளின் அச்சுறுத்தல் பெருமளவில் உள்ளது. 60 ஆண்டுகாலமாக தீா்க்கப்படாத பிரிவு 17 நிலப்பிரச்னையும் உள்ளது. இந்நிலையில் இந்தப் பிரச்னைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், பந்தலூா் தாலூகா அம்மன்காவு கிராமத்தைச் சோ்ந்த சிவப்பிரகாஷ் (27), தேவா்சோலை பேரூராட்சி, புழம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சியோன் செரியன் (28) ஆகிய இருவரும் கூடலூா் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை தொடங்கினா். இவா்களின் முயற்சியை இப்பகுதியிலுள்ள சமூக ஆா்வலா்கள் மு.க.முருகன், சரவணன் உள்ளிட்டோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா். இவா்கள் சென்னைவரை நடந்து சென்று முதல்வரை சந்தித்து கூடலூா் பிரச்னைகளை தீா்க்க முறையிட உள்ளனா்.