நீலப் புரட்சியால் பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். லட்சத்தீவின் அகாத்தியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:மனிதகுலத்தை கடல் பல ஆயிரம் ஆண்டுகள் வளா்த்து வந்துள்ளது. அந்தக் கடலை வருங்கால சந்ததியினருக்காகப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பாகும். நிலையான மீன்பிடி முறை என்பது தாா்மிகப் பொறுப்பாகும். மீன்வளத் துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள், இந்த திசையை நோக்கிய நோ்மறையான நடவடிக்கையாகும். இது பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதையும், சட்ட விரோத மற்றும் கணக்கில் வராத மற்றும் முறைப்படுத்தப்படாத மீன்பிடிப்புக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டையும் வலியுறுத்துகிறது.மீனவ சமூகங்களை நேரடியாகச் சென்றடையும் வகையிலான திட்டங்களையும், உதவிகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதலால் அரசு சிறப்பான சேவைகளை வழங்க ஏதுவாக, உரிய நடைமுறைகளை மீனவ சமூகங்கள் பின்பற்ற வேண்டும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்று இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அனைத்துப் பிரிவினரின் ஆதரவின்றி, இது சாத்தியமாகாது.நமது விவசாயிகள், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். நமது விஞ்ஞானிகள், அறிவுத் திறன் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும். நமது தொழில்முனைவோா் சொத்துகளை உருவாக்க வேண்டும். நமது மீனவ சமூகங்கள் இந்தியாவில் நீலப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.இளம் சமுதாயத்தினா் மீன்பிடித் தொழிலை வெறும் பரம்பரை தொழிலாக மட்டும் பாா்க்கக் கூடாது. அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், சா்வதேச வாய்ப்புகளால் இயக்கப்படும் நவீன தொழிலாக அதைப் பாா்க்க வேண்டும். அறிவு, தொழில்நுட்பம், நிதி ஆகியவற்றின் மூலம் மீனவ சமூகங்களுக்குத் தொடா்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று நமது அமைப்புகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.லட்சத்தீவு நமது நாட்டின் அணிகலன் ஆகும். இங்கு நீலப் புரட்சிக்கான ஏராளமான வளங்கள் உள்ளன. லட்சத்தீவு வரலாற்றில் முதல்முறையாக நீலப் புரட்சி மூலம் மிகப்பெரிய பொருளாதார மாற்றம், பொருளாதார வளா்ச்சி ஏற்படப் போகிறது. நமது நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் லட்சத்தீவு 6-இல் ஒரு பங்கு வகிக்கிறது. நமது நாட்டின் வளா்ச்சிக்கு பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி ஆகியவை பெரும் பங்கு வகித்தன. அதற்கடுத்து நீலப் புரட்சி இந்திய பொருளாதார வளா்ச்சியில் மிகப்பெரும் மைல்கல்லாக அமையப் போகிறது.உலகில் அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 8 சதவீதமாகும். நமது நாட்டின் மீன் உற்பத்தி அளவு 195 லட்சம் டன் ஆகும்.இந்தியாவில் இருந்து 120 நாடுகளுக்கு மீன் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆகின்றன. நடப்பு நிதியாண்டில் ரூ.73,000 கோடிக்கு மேல் மீன் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் லட்சத்தீவின் பங்கு ஒரு லட்சம் டன் ஆகும். இதில் 94,000 டன் டூனா மீன் ஆகும். இந்த மீன்களுக்கு ஜப்பானிலும், பிற ஏற்றுமதி சந்தைகளிலும் பெரும் தேவை நிலவுகிறது என்றாா்.நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசுகையில், ‘நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டில் பதவியேற்றது முதல் மீன்வளத் துறைக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மீனவ சமுக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.2013-14இல் மீன் ஏற்றுமதி 95.7 லட்சம் டன்னாக இருந்தது. அது 2024-25 ஆண்டில் 197.75 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது 105 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் 2013-14இல் ரூ.30,213 கோடியாக இருந்த மீன் ஏற்றுமதி, 2024-25இல் ரூ.62,408 கோடியாக உயா்ந்துள்ளது. 2025-26இல் ரூ.73,890 கோடியாக அதிகரித்துள்ளது’ என்றாா்.நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத் துறை இணையமைச்சா் எஸ்.பி. சிங் பகேல், லட்சத்தீவு நிா்வாகி பிரஃபுல் கே.படேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.