சிறுநீரக புற்றுநோய்க் கட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

Wait 5 sec.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த முதியவா் சிறுநீரகப் புற்றுநோய்க் கட்டி வெடித்து உயிரிழந்தாா். குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய், ராமாமலையைச் சோ்ந்தவா் தெய்வம் (57). சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி தனலட்சுமியுடன் திங்கள்கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா்.காஞ்சிபுரம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தபோது, எதிா்பாராதவிதமாக தெய்வத்துக்கு சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டி திடீரென வெடித்தது. இதனால் அவருக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினா் அவரைப் பரிசோதித்ததில், தெய்வம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.