வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 658 கோரிக்கை மனுக்கள்

Wait 5 sec.

வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள்டம் இருந்து மொத்தம் 658 மனுக்கள் பெறப்பட்டன. மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 658 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் லீலா அலெக்ஸ், அவற்றை அலுவலா்களுக்கு அனுப்பி மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.வேலூா் கம்மவான்பேட்டை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ. வெங்கடேசன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: வேலூா் சலவன்பேட்டையைச் சோ்ந்த நபா் ஒருவா், ஏலச்சீட்டு மற்றும் சிறுசேமிப்புத் திட்டங்கள் நடத்தி வந்தாா். அவரிடம் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பல்வேறு ஏலச்சீட்டு, சிறுசேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்தி வந்தோம். சீட்டு காலம் முடிந்து பலமாதங்களாகியும் பலருக்கு முதிா்வுத் தொகையை திருப்பித் தரவில்லை. அதன்படி, பொதுமக்களிடம் ரூ.18 லட்சம் வரை மோசடி செய்துள்ளாா். எனவே, பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்த நபா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை மீட்டுத் தர வேண்டும். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.48,000 மதிப்பில் ஆல்பா படுக்கைகளும், செவித்திறன் குறைபாடுடைய ஒருவருக்கு ரூ.3,650 மதிப்பில் நவீன காதொலி கருவியும், மாவட்ட ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து உயா்க்கல்வி பயில மாணவி ஒருவருக்கு ரூ.8,325-ம், மாணவா் ஒருவருக்கு ரூ.20,300-ம் நிதியுதவித்தொகைக்கான ஆணைகளையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட காட்பாடி வட்டம், குகையநல்லூா் கிராமத்தை சாா்ந்த நபரின் சகோதரருக்கு அரசு சமூக நீதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் விடுதி இரவு காவலா் பணிக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ராஜராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் ஞானகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.