ஆர்ஜென்டீனா அணியிலிருந்து மெஸ்ஸி ஓய்வு

Wait 5 sec.

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக, நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (39) திங்கள்கிழமை அறிவித்தார். சர்வதேச கால்பந்து களத்திலிருந்து விடைபெற்றிருக்கும் அவர், கிளப் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிகிறது. டியேகோ மாரடோனாவுக்கு பிறகு சர்வதேச களத்தில் ஆர்ஜென்டீனாவின் கால்பந்து கதாநாயகனாக மிளிர்ந்த மெஸ்ஸி, சுமார் 20 ஆண்டுகள் தேசிய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஆர்ஜென்டீனாவுக்காக மெஸ்ஸி 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்க, அவர் தலைமையில் அந்த அணி 2022}இல் சாம்பியன் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடப்பாண்டு போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து, அதில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டது. இந்நிலையில், ஓய்வு முடிவை அறிவித்து தனது ’இன்ஸ்டாகிராம்' சமூக வலைதள கணக்கில் மெஸ்ஸி வெளியிட்ட பதிவு: ”இது வலி தரக்கூடிய முடிவாக இருந்தாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரமாகும். கடந்த சில காலமாக பெற்ற வெற்றிகளின்போது மட்டும் அல்லாமல், அதற்கு முன்பாகவுமே ஆர்ஜென்டீனா அணிக்காக நான் முழுமையான அர்ப்பணிப்புடன் விளையாடினேன் என்பதை உறுதியாகக் கூறுவேன். ஆர்ஜென்டீன குடிமக்களாக நீங்கள் பெருமை மற்றும் மகிழ்ச்சி கொள்வதற்காக, களத்தில் எப்போதும் நான் கடுமையாகப் போராடியதுடன், தேவையான அனைத்தையும் செய்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் காட்டி வந்த அன்புக்கு நன்றி. இனி உங்களில் ஒருவனாக இருந்து ஆர்ஜென்டீன அணிக்கு ஆதரவும், உற்சாகமும் அளிக்கப் போகிறேன். ஒரு காலத்தில் நாம் கனவாகக் கொண்டிருந்த தருணங்களை, எனது சக வீரர்களுடன் இணைந்து உங்களுக்கு நிஜமாக்கிக் கொடுத்த மன அமைதி மற்றும் பெருமையுடன் நான் விடைபெறுகிறேன். அந்த வெற்றிகளை உங்களோடு கண்டது அற்புதமானது” என்று அதில் மெஸ்ஸி கூறியுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டு 2 நாள்களுக்குப் பிறகு (ஜூலை 21) இந்த ஓய்வு முடிவு கடிதத்தை தாம் எழுதிவிட்டதாகவும், அப்போது தனது தந்தை உடல்நலக்குறைவுடன் இருந்ததால் முடிவை தாமதித்ததாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலமானார். சர்வதேச களத்திலிருந்து ஓய்வு பெற்ற மெஸ்ஸி, கிளப் போட்டிகளில் தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன், பார்சிலோனா எஃப்சி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.