தடுமாறும் சாட்பாட்கள்

Wait 5 sec.

சங்க காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்தார்கள். அச்சுக் காலத்தில் அச்சில் பயணித்தது தமிழ். கணினி காலத்தில் விசைப் பலகைக்குள் நுழைந்தது தமிழ். இணைய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இன்று செயற்கை நுண்ணறிவு காலத்திலும் தமிழ் தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறது.ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட தமிழ், இன்று உலகளாவிய எண்மத் திரையில் அற்புதமாக ஒளிர்கிறது. அந்த ஒளி அடுத்த தலைமுறையிலும் அணையாமல் இருக்க வேண்டியது நம் பொறுப்பு. ஆனால், தொழில்நுட்பம் தமிழை வளர்க்க வேண்டுமென்றால் முதலில் நாம் தமிழைப் பயன்படுத்த வேண்டும். தமிழில் தேட வேண்டும்; தமிழில் எழுத வேண்டும்; தமிழில் அதனுடன் பேச வேண்டும்; தமிழில் அறிவைப் படைக்க வேண்டும். ஒரு மொழியை வாழ வைப்பது எது? அதன் இலக்கண, இலக்கிய வளம் மட்டுமா? அதை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மனிதர்கள்தான் அடுத்தடுத்த கட்டத்துக்கு மொழியை அழைத்துச் செல்கிறார்கள்.செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சார்ந்த உரையாடல் கருவிகள் நமக்கு என்ன செய்கின்றன? கேட்ட கேள்விக்கு கண நேரத்தில் பதில், ஆயிரம் பக்கம் புத்தகத்தைப் படித்தவர் போல விளக்கம், கவிதை கேட்டால் கவிதை, கட்டுரை கேட்டால் கட்டுரை, மொழிபெயர்ப்பு கேட்டால் மொழிபெயர்ப்பு. இன்று நம் கைப்பேசிக்குள் அமர்ந்திருக்கும் அவை நம்மை வியக்க வைக்கின்றன.சாட் ஜிபிடி வந்த தொடக்கத்தில் தமிழில் உள்ளீடு செய்தால் "இன்னும் இந்த மொழியில் பதில் அளிக்கும் திறனை, வசதியைப் பெறவில்லை, மன்னிக்கவும்' என ஆங்கிலத்தில் நமக்கு தெரிவித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் இந்த ஏஐ சாட் பாட்கள் (அரட்டை இயலி) அபார வளர்ச்சி பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இன்று தமிழில் நமக்கு விதவிதமாகப் பதிலளிக்கின்றன. தகவல் பெற்றபிறகு "நன்றி" என்று சொன்னால் "ரொம்ப சந்தோஷம் மேடம்" என்பதுவரை வாய் நீள்கிறது. ஆனால், நம் மொழி சார்ந்த, மண் சார்ந்த கேள்விகளுக்குப் பெரிதும் தடுமாறுகிறது.சாட் பாட்கள் தமிழை அறிந்திருப்பதற்கும் தமிழை உணர்ந்திருப்பதற்கும் இடையே ஒரு பெரிய தொலைவு இருக்கிறது. அதில்தான் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பல இடங்களில் தடுமாறுகிறது. ஒரு சொல்லுக்கு அகராதியில் ஒரு பொருள் இருக்கும். ஆனால், அது பயன்படுத்தப்படும் சூழலில் வேறு பொருளாக மாறுபடும். தமிழின் மிகப் பெரிய சிறப்பு இதுதான். "அவன் தலையைச் சுற்றி வந்தான்" என்றால் அது உண்மையில் தலையைச் சுற்றி நடந்தான் என்று பொருள் கொள்ளப்பட வேண்டியதில்லை. "அன்று அவள் கை கொடுத்தாள்" என்பதும் வெறுமனே கையை நீட்டினாள் என்பதல்ல, உதவினாள் என்ற பொருளையும் தரலாம். இத்தகைய சூழல்சார் பொருள்களை செயற்கை நுண்ணறிவு சில நேரங்களில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து பொருள் எடுத்துக் கொள்கிறது.நம் வட்டாரத் தமிழ் அதற்கு இன்னும் தலைசுற்றுகிறது. "என்னம்மா செய்ற?" என்பதும் தமிழ், "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்பதும் தமிழ். ஆனால், இவற்றின் பின்னால் இருக்கும் மனிதர்களின் குரல், நகைச்சுவை, நெருக்கம் ஆகியவற்றை ஏ.ஐ. எப்போதும் ஒரே அளவில் உணர்ந்து கொள்வதில்லை. வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள், உள்ளூர் சொலவடைகள் வந்துவிட்டால் அதற்கு இன்னும் தடுமாற்றம் அதிகரிக்கிறது போலும்.செயற்கை நுண்ணறிவு இலக்கிய நடையில் கட்டுரை எழுதி விடுகிறது; சங்க இலக்கியம் குறித்துப் பற்றி பேசி விடுகிறது; சில நேரங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டி விடுகிறது. நாம் சொல்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் கூறுகிறது; ஆனால், ஒரு சொல்லின் பின்னால் இருக்கும் காலத்தையும் கலாசாரத்தையும் மனித உணர்வையும் அது உணர்வதே இல்லை. அது சில நேரங்களில் அழகான சொற்களை நாம் வியக்கும் வகையில் அடுக்கியும் தருகிறது. ஆனால், அவை ஒன்றோடொன்று இயல்பாகப் பொருந்தாமல் போவதை நம்மால் பார்க்க முடிகிறது.பழமொழிப் பக்கம் வந்தால் நமக்கு பெரும் சோதனைதான். தமிழ் பழமொழிகள் வெறும் சொற்களின் கூட்டமல்ல. அவற்றுக்குப் பின்னால் பல தலைமுறைகளின் அனுபவம் இருக்கிறது. "குறைகுடம் கூத்தாடும்” என்பதன் நேரடிப் பொருளை மட்டும் புரிந்து கொண்டால் பழமொழியின் நோக்கம் தொலைந்து போய்விடும். அதேபோல் ஒரு பழமொழியை வேறு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்த்தால் அதன் ஆன்மா காணாமல் போய்விடும். இங்கேதான் அதற்கு மிகப் பெரிய சவால். இன்னும் இதில் நகைச்சுவை இடம்பெற்றால் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகி விடுகிறது. தமிழ் நகைச்சுவையின் பெரும் பகுதி சொல் விளையாட்டிலும், இரட்டை அர்த்தத்திலும், குரல் ஏற்ற இறக்கத்திலும், சூழலிலும் இருக்கிறது.ஒருவர் "சரி, நீங்க மிகப் பெரிய நபர்தான்' என்று சொல்வதை உண்மையான பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்; கேலியாகவும் எடுத்துக் கொள்ளலாம். அந்த வேறுபாட்டை மனிதர்கள் முகபாவனையிலேயே புரிந்து கொள்வார்கள். "உடம்பு எப்படி இருக்கு?” என்று அக்கறையுடனும் கேட்கலாம்; "உடம்பு எப்படி இருக்கு” என்று நம்மைப் பார்த்து பயமுறுத்தும் தோரணையிலும் கேட்கலாம். ஏ.ஐ.க்கு அந்த முக பாவனை இல்லை. அதனால், சில நேரங்களில் நாம் சிரிக்க வேண்டிய இடத்தில், அது நீண்டதொரு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.தமிழில் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேரும்போது ஏற்படும் மாற்றங்களை அது சரியாகப் புரிந்துகொள்ளாமல் நம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதுடன் சில நேரங்களில் தவறான வார்த்தைகளை உருவாக்குகிறது. அதிலும் பல சாட் பாட்கள் தமிழை நேரடியாக புரிந்துகொள்ளாமல் ஆங்கிலத்தில் யோசித்து அதை தமிழில் மொழிபெயர்ப்பதால் வாக்கியங்கள் செயற்கையாகவும் வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் கொள்வதால் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதது போன்ற பிம்பத்தையும் உருவாக்குகின்றன.நாம் பயன்படுத்தும் உறவு முறைப் பெயர்களான பெரியப்பா, மாமா, கொழுந்தனார் போன்றவை மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்வுகளின் நுணுக்கங்களை அதற்கு சரியாகக் கையாளும் திறன் வரவில்லை. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், பெரும்பாலான தமிழ் பயனர்கள் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தியே தமிழில் உள்ளீடு செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, "சாப்டீங்களா?” என்பதை ஆங்கிலத்தில் ஆங்கில எழுத்துகளில் என தட்டச்சு செய்கிறார்கள். இதை சரியாகப் புரிந்து கொண்டு துல்லியமான பதில் தருவதில் பல சாட் பாட்கள் இன்னும் பின்தங்கியே உள்ளன. இணையத்தில் ஆங்கில மொழியில் இருக்கும் விரிவான தரவுகளுடன் ஒப்பிடும்போது தமிழில் தரமான பயிற்சித் தரவுகள் குறைவாகவே உள்ளன. இதனால், ஆழமான அல்லது தொழில்நுட்ப கேள்விகளுக்கு தமிழில் பதில் தரும்போது வழுக்குகிறது.தமிழறிஞர்கள், கவிஞர்கள், மன்னர்கள், ஊர் பெயர்கள், பழைய நூல்கள் போன்றவற்றை உள்ளிடும்போது அது எக்கச்சக்கமாய் குழம்புகிறது. குறிப்பாக, ஒரே பெயரில் பலர் இருக்கும் நிலையில் நமக்கு நிச்சயம் தவறான தகவல் தரவே வாய்ப்புகள் அதிகம். பண்டைய இலக்கியங்களில் வரும் அரிதான சொற்கள் அல்லது குறைவாக பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வரலாற்று தகவல்கள் வந்தால் தவறான தகவலை சொல்லிவிடுகிற அபாயம் நீடிக்கிறது. இனி வரப் போவதுதான் இந்த சாட்பாட்களின் முக்கியமான பலவீனம். தெரியாததை தெரியாது என்று அது ஒப்புக் கொள்வதே இல்லை. தெரியாததைக்கூட தெரிந்ததை போல் சொல்லும் அதிமேதாவி ரகம்தான். ஆனால், அவற்றைக் குறை கூறுவதால் பலன் இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஏ.ஐ. தமிழை விரும்பாதது அல்ல. தமிழின் பயன்பாட்டையும், பேச்சு வழக்குகளையும், நாட்டுப்புறச் சொற்களையும், இலக்கியப் பின்னணியையும் பிரதிபலிக்கும் தரவுகள் போதுமான அளவில் இல்லாது இருப்பதே.இதற்கான தீர்வு தமிழர்களாகிய நம்மிடம்தான் உள்ளது. இணையத்தில் நாம் அதிகமாக தமிழில் எழுத வேண்டும். அதுவும் தரமான தமிழில் எழுத வேண்டும். பண்டைய இலக்கியங்களையும், நாட்டுப்புற கதைகளையும், வட்டார வழக்குச் சொற்களையும், பழமொழிகளையும், சொலவடைகளையும், அறிவியல் கட்டுரைகளையும், சமகால தமிழையும் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இது "ஜென்ஸீ” தலைமுறையின் முக்கியமான கடமையும்கூட. ஏனெனில், ஒரு மொழி தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால், அந்த மொழி சார்ந்த இனமே பின்தங்கிவிடும். தமிழை ஏ.ஐ.க்கு கற்றுக் கொடுப்பது தமிழர்களின் பொறுப்பும்கூட.ஏ.ஐ. சார்ந்த உரையாடல் கருவிகள் தமிழில் இன்று வியக்கத்தக்க அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. ஆனால், அவற்றின் தமிழ் இன்னும் ஒரு முழுமையான தமிழறிஞரின் தமிழ்போல் இல்லை. மாறாக, தமிழை கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவரின் தமிழைப் போன்று உள்ளது. தமிழின் வீச்சை, நம் மண்ணின் வாசனையை முழுமையாக உணர்வதற்கு செயற்கை நுண்ணறிவுக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம். தமிழர்கள் அதன் தளங்களைத் தொடர்ந்து செம்மைப்படுத்தும் போது, நாளைய தமிழ் அதன் வசம் இன்னும் அழகாகும்.கட்டுரையாளர்:எழுத்தாளர்.