முனைவர் ம. லூக்காஸ் ஜனநாயகத்தின் நிலைபேறான ஆற்றல், அதிகாரத்தை நாடுவோரின் புகழால் அல்ல; அந்த அதிகாரத்தை வழங்கும் குடிமக்களின் அறிவார்ந்த முதிர்ச்சி யாலேயே அளவிடப்படுகிறது.தமிழகப் பொது வாழ்வில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மொழி, பண்பாடு, சமூக நினைவு, அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றை திரைப்படம் வடிவமைத்துள்ளது. ஆகவே, கலைஞர்கள் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்துக்கு எதிரானதன்று. ஆனால், திரைப் புகழ் ஆட்சித் திறனுக்கான தகுதியெனக் கருதப்படுவது ஆபத்தான மனப் பிழையாகும்."ஒருதலைப்பட்ச சமூகத் தொடர்பு” எனப்படும் மனநிலை, திரையில் தொடர்ந்து தோன்றும் ஒருவருடன் நேரில் பழகாதபோதும் நெருக்கம் இருப்பதாக உணரச் செய்கிறது. "ஒளிவட்ட விளைவு” ஒருவரின் ஒரு சிறப்பை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பிற திறன்களையும் மிகையாக மதிப்பிடச் செய்கிறது. இதனால், திரையில் வெளிப்படும் வீரமும் சொல்லாற்றலும், அரசியல் ஞானம், நிர்வாகத் திறன், நெருக்கடி மேலாண்மை ஆகியவற்றுடன் தவறாக இணைக்கப்படுகின்றன.ஆனால், நல்ல பொதுத் தலைமை வேறு திறன்களை வேண்டுகிறது. ராபர்ட் கேட்ஸ் சுட்டும் தொழில்நுட்ப, மனித உறவு, கருத்தாக்கத் திறன்களுடன், நிறுவனப் புரிதல், தொலைநோக்கு, பகுத்தறிவு, அறப் பொறுப்பு ஆகியவை அவசியம்.பீட்டர் டிரக்கர் வலியுறுத்தியபடி, தலைமை புகழால் அல்ல; பொறுப்புடைமை, நிறுவன வலிமை, பொதுநல முடிவுகள் ஆகியவற்றால் மதிப்பிடப்பட வேண்டும்.திரை, தொழில், சட்டம், விளையாட்டு போன்ற துறைகளிலிருந்து அரசியலுக்கு வருவோரை வரவேற்பது இயல்பானது. ஆனால், வாக்காளர்கள் புகழை மட்டும் நோக்காமல் நம்பகத்தன்மை, கொள்கைத் தெளிவு, செயலாக்கத் திறன், கட்சி அமைப்பு, பொதுநலப் பார்வை ஆகியவற்றையும் மதிப்பிட வேண்டும்.இன்றைய எண்ம காலத்தில், சமூக ஊடகங்களின் கணினி வழிமுறைகள் (அல்காரிதம்) மக்களின் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இவ்வாறு உருவாகும் "கவனப் பொருளாதாரம்” உணர்ச்சியையும் கவர்ச்சியையும் அரசியல் மூலதனமாக்குகிறது. குறிப்பாக இளைய தலைமுறை, தகவலைப் பெறுவதுடன் நிற்காமல் அதன் பின்னுள்ள நோக்கம், ஆதாரம், உண்மை ஆகியவற்றை ஆராயும் ஊடக விழிப்புணர்வையும் விமர்சனச் சிந்தனையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகம் பின்பற்றுபவர்களால் அல்ல; சிந்திப்பவர்களால் வலுப்பெறும்.வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பாக ஒவ்வொரு குடிமகனும் ஆறு கேள்விகளை எழுப்ப வேண்டும். இந்த நபரிடம் பொதுப் பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகள் உள்ளனவா? அரசமைப்பு, வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றில் உறுதியானவரா? பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொது நிதி ஆகியவற்றைப் புரிந்துள்ளாரா? பல்வேறு சமூகங்களை ஒருங்கிணைத்து நிறுவனங்களை வலுப்படுத்துவாரா? தற்காலிகப் புகழை விட நீண்டகால நலனுக்காகக் கடின முடிவெடுப்பாரா? அடுத்த தலைமுறைத் தலைவர்களையும் ஜனநாயக விவாதத்தையும் உருவாக்குவாரா?விமர்சன சிந்தனையையும் ஊடக விழிப்புணர்வையும் கல்வியில் பின்லாந்து வளர்க்கிறது; நிர்வாகத் திறனையும் தொலைநோக்கையும் சிங்கப்பூர் வலியுறுத்துகிறது; டென்மார்க், நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகள் தனி நபர்களைவிட நிறுவனங்கள் மீது நம்பிக்கையை வளர்த்துள்ளன; ஜெர்மனியும் ஜப்பானும் சட்டத்தின் ஆட்சியையும் நிறுவன ஒழுங்கையும் வலுப்படுத்தியுள்ளன. இவை கூறும் பாடம் - வலிமையான ஜனநாயகத்தை உருவாக்குவது புகழ்பெற்ற தலைவர்கள் மட்டும் அல்ல; விழிப்புணர்வுமிக்க குடிமக்களே.இந்தத் தேர்வு தனிநபர் வெறுப்போ ஆதரவோ சார்ந்ததாக இருக்கக் கூடாது. ஜனநாயகம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேர்தலில் நிற்கும் உரிமையையும், ஒவ்வொரு வாக்காளருக்கும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் வழங்குகிறது. ஆகவே, அரசியலுக்கு யார் வரலாம் என்பதல்ல பிரச்னை; யார் ஆட்சி செய்யத் தகுதியுடையவர் என்பதை எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதே. புகழ் ஒரு கதவைத் திறக்கலாம்; ஆனால், ஆட்சி செய்யும் திறன் மட்டுமே அந்தப் பொறுப்பை நியாயப்படுத்த முடியும்.இந்தியாவின் இளைய வாக்காளர்கள் இந்த மாற்றத்தில் தீர்மானகரமான பங்கு வகிக்கின்றனர். அரசியல் என்பது தனிநபர் புகழின் மேடை அன்று; அது மக்களின் வாழ்வை நிர்வகிக்கும் பொது நிறுவனம். ஆகவே, தலைவரின் பேச்சுத் திறனைவிட அவர் உருவாக்கும் கொள்கையின் தரம், வாக்குறுதியைவிட அதன் செயலாக்கம், பிரபலத்தையொட்டிய பிம்பத்தைவிட அவர் காட்டும் பொறுப்புணர்வு ஆகியவையே முக்கியம்.குடிமக்கள் இவ்வாறு மதிப்பிடத் தொடங்கும்போது, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களின் தகுதி, திட்டம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும். அதுவே வாக்காளரின் அதிகாரத்தை உண்மையான ஜனநாயகச் சக்தியாக மாற்றும்.திரைப்படம் நமது கற்பனைக்கு சிறகளிக்கட்டும்; ஜனநாயகம் நமது பகுத்தறிவுக்கு நெறியளிக்கட்டும். திரையரங்கின் கைதட்டல் காட்சியுடன் முடிவடையும்; வாக்குப்பெட்டியில் இடப்படும் வாக்கு தலைமுறைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். ரசிகர்களிலிருந்து பொறுப்புள்ள குடிமக்களாகவும், ஈர்ப்பிலிருந்து மதிப்பீட்டுக்கும், உணர்ச்சியிலிருந்து சான்றுகளுக்கும், தனி நபர் பிம்பத்திலிருந்து பொதுநலக் கடமைக்கும் நாம் நகர வேண்டும்.ஒவ்வொரு வாக்கும் எதிர்காலத்தின் பொறுப்பை ஏந்துகிறது; அதை அறிவுடனும் நெறியுடனும் செலுத்துவதே உயர்ந்த குடிமகன் கடமையாகும் என்ற உண்மையை நாம் மறக்கக் கூடாது.ஜனநாயகம் உருவாக்கக்கூடிய மிகப் பெரிய கதாநாயகன் மேடையில் நிற்பவர் அல்ல; வாக்களிப்பதற்கு முன் சிந்திக்கும் ஒவ்வொரு குடிமகனுமே!