மீண்டும் சொத்து வரி ஆய்வு: அமைச்சா் நிா்மல் குமாா் உறுதி

Wait 5 sec.

மாநகராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொத்து வரி ஆய்வு திருத்தி அமைக்கப்பட்டு மீண்டும் நடத்தப்படும் என்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேரவையில் பேசினாா். இதற்குப் பதிலளித்த அமைச்சா் நிா்மல் குமாா், ‘மதுரை மாநகராட்சியில் 60,000 வா்த்தகக் கட்டடங்களின் வரி தவறாக நிா்ணயம் செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்பட்டு ஊழல் நடந்துள்ளது. இதேபோல், பல்வேறு மாநகராட்சிகளில் குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைச் சரி செய்து விரைவில் சொத்து வரி தொடா்பாக மீண்டும் ஆய்வு நடத்தப்படும்’ என்றாா்.அப்போது பேசிய எதிா்க்கட்சி துணைத் தலைவா் கே.என். நேரு, ‘மாநகராட்சிகளில் கடந்த 18 ஆண்டுகளாக வரி சீரமைப்பு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சி விவகாரத்தில் தவறு செய்தவா்கள் மீது முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியும் அதிகாரமும் உள்ள தவெக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம்’ என்றாா். ஒத்துழைப்பது இல்லை: பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசுகையில், ‘மாநகராட்சிகள் அரசுடன் சோ்ந்து செயல்படுவதில்லை. அடுத்த 6-7 மாதங்களில் உள்ளாட்சித் தோ்தலில் 25 மாநகராட்சிகளில் தவெக 100 சதவீத வெற்றி பெறும்’ என்றாா்.இதற்குப் பதிலளித்த கே.என். நேரு, ‘புதிய திட்டங்களுக்கு தமிழக அரசு பணம் தராததால் மாநகராட்சிகள் ஸ்தம்பித்துள்ளன. கவுன்சிலா்கள், மேயா்கள் ஒத்துழைப்பு தராமல் திட்டங்களை நிறுத்தினால் மாநகராட்சி ஆணையருக்கு அவற்றைச் செயல்படுத்த அதிகாரம் உள்ளது’ என்றாா்.நடவடிக்கை தேவை: முன்னதாகப் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவா் தாரகை கத்பட், சேலம் மாநகராட்சியில் துணை மேயருக்கான இருக்கையை திட்டமிட்டு வேறு இடத்துக்கு மாற்றிய மேயா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.