- கவிதைவீதி சௌந்தர்கதிரவன் கல்லூரிப் படிப்பை முடித்து வீட்டுக்கு வந்து சில நாள்கள்தான் ஆகியிருந்தன. அன்று இரவு உணவு முடிந்ததும், வீட்டின் முன் அறையில் அமர்ந்திருந்தான். அம்மா சமையலறை வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்து, அவனருகில் அமர்ந்தாள்.'என்ன கதிர்... அடுத்து என்ன செய்யப் போறே?' என்று கேட்டாள்.'என்னம்மா செய்யணும்? முதல்ல ஒரு நல்ல வேலை தேடணும்.''வேலைக்குத்தான் போகணுமா?''இல்லம்மா... உண்மையைச் சொன்னா, யார்கிட்டயும் வேலை பார்க்க எனக்கு அவ்வளவா விருப்பமில்லை.'அம்மா புன்னகைத்தாள்.'அப்போ?''எனக்குன்னு சொந்தமா ஒரு தொழில் ஆரம்பிக்கணும். யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. நானே சம்பாதிக்கணும். நானே வளரணும்.'அந்த நேரத்தில் உள்ளிருந்து வந்த ஞானமுத்து, மகனின் பேச்சைக் கேட்டபடி அவர்களருகில் அமர்ந்தார்.'அது நல்ல ஆசைதான் கதிர்' என்றார்.'அதனால்தான் உன்னிடம் ஒன்று சொல்லணும்னு நானும் உங்க அப்பாவும் நினைச்சுட்டிருந்தோம்' என்றாள் அம்மா.'என்னம்மா?''வேலை தேடிக்கிட்டு இருக்கிற வரைக்கும் அல்லது உனக்கான தொழிலை தீர்மானிக்கிற வரைக்கும் உங்க அப்பாவோட கடைக்குப் போய் அவருக்கு உதவியா இரு.'கதிரவன் உடனே முகத்தைச் சுளித்தான்.'கடைக்கா?''ஆமாம். ஏன்?''அம்மா, நான் இவ்வளவு வருஷம் படிச்சது எதற்காக? இப்போ போய் மளிகைக் கடையில உட்கார்ந்து அரிசி, பருப்பு எடை போடணுமா?'அம்மா சிரித்தாள்.'அதுல என்ன தப்பு கதிர்?''தப்புன்னு சொல்லல. ஆனா, அதுல என்ன கத்துக்கறது? சாமான் வாங்குறாங்க, விக்கிறாங்க, காசு வாங்குறாங்க. அவ்வளவுதானே?'ஞானமுத்து மகனைப் பார்த்து அமைதியாகச் சிரித்தார்.அம்மா மெதுவாகச் சொன்னாள்.'நீ சின்ன வயசுல இருந்தே உங்க அப்பா காலையில கடைக்குப் போறதைப் பார்த்திருக்க. ஆனால், அவர் ஏன் அவ்வளவு சீக்கிரம் போறார், ஏன் இரவு வரைக்கும் அங்கேயே இருக்கிறார் என்று ஒருநாளாவது யோசிச்சிருக்கியா?'கதிரவன் அமைதியாக இருந்தான்.'நீ நல்லா படிக்கணும்னு நினைச்சவர் உங்க அப்பா. நீ எதற்கும் குறைவில்லாம வளரணும்னு நினைச்சவர். உனக்காகத்தான் இத்தனை வருஷம் உழைச்சிருக்கார்.''அம்மா, அதெல்லாம் எனக்குத் தெரியும்.''தெரியும். ஆனா, புரிஞ்சிருக்கா?'அந்த ஒரு கேள்வி கதிரவனை அமைதியாக்கியது.'இந்த வீடு, இந்தக் கடை, நீ படிச்ச கல்லூரி... இவையெல்லாத்துக்கும் பின்னாடி உங்க அப்பாவோட உழைப்பு இருக்கு. நீ அவரோட கடைக்குப் போறது அவரோட தொழிலை எடுத்துக்கணும்னு என்பதற்காக இல்ல. அவர் எப்படி வாழ்க்கையை உருவாக்கினார் என்பதை ஒருமுறை அருகிலிருந்து பார்க்கணும்னுதான்.'கதிரவன் தந்தையைப் பார்த்தான்.ஞானமுத்து எதுவும் பேசவில்லை.'நீ சொந்தமா தொழில் செய்யணும்னு ஆசைப்படுறது நல்லதுதான். ஆனால், தொழில் தொடங்குறதுக்கு முன்னாடி, தொழில் சார்ந்த மனிதர்களைப் புரிஞ்சுக்கணும். உங்க அப்பா அதை அனுபவத்துல கத்துக்கிட்டவர்.'சிறிது நேரம் அமைதியாக இருந்த அம்மா, கதிரவனின் தலையைத் தடவியபடி சொன்னாள்.'கதிர்... பணம் சம்பாதிக்கக் கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. பணம் சம்பாதிக்கும்போது மனிதர்களை இழக்காமல் இருப்பதுதான் பெரிய விஷயம்.'கதிரவன் அம்மாவைப் பார்த்தான்.'அதையெல்லாம் அந்தக் கடையில எப்படிக் கத்துக்க முடியும்?'இந்த முறை ஞானமுத்து பேசினார்.'முடியும் கதிர்.'அவர் மெதுவாகத் தொடர்ந்தார்.'அந்தக் கடையில பொருள்கள் மட்டும் விற்கப்படுவதில்லை. மனிதர்களோட நம்பிக்கையும் வாங்கப்படுகிறது... சில நேரம் நம்ம நேர்மையால.'கதிரவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.'நான் உன்னை கடைக்கு அழைக்கிறது என் வேலையை உன்னிடம் திணிப்பதற்காக இல்ல. நீ விரும்புற தொழிலை நீ செய். ஆனா, அதற்கு முன்னாடி வாழ்க்கையில சில விஷயங்களைத் தெரிஞ்சுக்கோ. புத்தகத்துல படிக்க முடியாத பாடங்கள் சில இருக்கு.'அம்மா உடனே சொன்னாள்.'உங்க அப்பா சொல்றதை இப்போ உனக்குப் புரியாம இருக்கலாம். ஆனா, ஒருநாள் புரியும்.'கதிரவன் சிறிது நேரம் யோசித்தான்.'சரி... வேலை கிடைக்கிற வரைக்கும் உங்க கடைக்கு வர்றேன்.'அம்மாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.ஞானமுத்து புன்னகைத்தார்.'நாளைக்கு காலையில என்னோட சேர்ந்து வா.''சரிப்பா!'கதிரவன் எழுந்து வீட்டுக்குள் சென்றான்.அவன் சென்றதும் அம்மா தன் கணவரைப் பார்த்தாள்.'அவனுக்கு இந்த வயசுல தன்னம்பிக்கை அதிகம். கொஞ்சம் ஏளனமா பேசினாலும் நல்ல மனசு.'ஞானமுத்து புன்னகைத்தார்.'அதனாலதான் அவனை கடைக்கு அழைக்கிறேன். அவன் என்னோட தொழிலைக் கத்துக்க வேண்டியதில்லை. அவனோட வாழ்க்கையை அவனே கத்துக்கணும்.'அடுத்த நாள் காலை. கதிரவன் வேலைக்கு என்று அவர்களுடைய மளிகைக் கடைக்குச் சென்றான். இதுவரை பலமுறை சாப்பாடு கொடுக்க, அப்பாவை டிராப் பண்ண சென்றிருக்கிறான். அப்போது இல்லாத சிறு படபடப்பு இப்போது அவனிடத்தில் இருந்தது.அவனுக்கு அது ஒரு சாதாரணக் கடையாகத்தான் தெரிந்தது. ஆனால், அவனுக்குத் தெரியாமல், அந்தச் சிறிய கடைதான் அவனுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய பள்ளியாக மாறப் போகிறது. இங்கு என்ன மாற்றம் கிடைத்துவிடப் போகிறது என்று ஏளனமாய்ப் பார்க்கப்படும் இடங்கள்தான் பல பேருக்கு ஞானம் கிடைத்த இடமாக மாறியிருக்கிறது.மாலை நேரத்து வெயில் மெல்லத் தணிந்து, அந்த ஊரின் பிரதான சாலையில் இருந்த 'முத்து மளிகை' கடையில் வியாபாரம் விறுவிறுப்படைந்தது.கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த ஞானமுத்து, தன் இருபது வயது மகன் கதிரவனைப் பெருமிதத்தோடு பார்த்தார். கல்லூரியை முடித்துவிட்டு, வாழ்க்கை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள இன்றுதான் அவன் முழு நேரமாகக் கடையில் அமர்ந்திருக்கிறான். என்னைப்போல் இவனும் மக்களுடைய நம்பிக்கையையும் நல்ல பேரையும் சம்பாதிக்கணும்.'கதிர், மளிகை வியாபாரம்கிறது வெறும் பொருளை வித்து காசு வாங்குறது மட்டும் இல்லப்பா. மனுஷங்களை வாசிக்கிற கலை' என்றார் ஞானமுத்து, பற்று வரவுப் புத்தகத்தை மூடி வைத்தபடி. 'என்னப்பா, நீங்க எப்பப் பாத்தாலும் தத்துவம் பேசிக்கிட்டு... வர்றாங்க, கேக்குறதைக் கொடுக்குறோம், காசை வாங்குறோம். இதிலென்ன மனுஷங்களை வாசிக்கிறது இருக்கு?' என்றான் கதிரவன் சிரித்துக் கொண்டே.'பொறுமையா இரு. வியாபாரத்துல ஜெயிக்கிறதுக்கு கணக்கு மட்டும் பத்தாது, 'கணிக்கிற' குணமும் வேணும். நம்ம கடைக்கு வர்ற ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதம். யார் எப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சுகிட்டாத்தான், ஏமாறாம தொழில் பண்ண முடியும்.'அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்தப் பகுதியின் முன்னணித் தொழிலதிபரான சேகர் தன் சொகுசு காரில் வந்து இறங்கினார். மாதாமாதம் தன் வீட்டுக்குத் தேவையான மொத்த மளிகைப் பொருள்களையும் இங்கேதான் வாங்குவார்.'வணக்கம் முத்து! இந்த மாசத்துக்கான லிஸ்ட். அப்படியே போன மாசத்து பாக்கி எவ்வளவுன்னு சொல்லுங்க, செட்டில் பண்ணிடுறேன்' என்றார் சேகர்.கதிரவன் சுறுசுறுப்பாக எழுந்து, பொருள்களைப் பட்டியலிட்டு, பில் தொகையையும் பழைய பாக்கியையும் சேர்த்துக் கணக்கிட்டான். 'மொத்தம் பதினைந்தாயிரத்து எண்ணூறு ரூபாய்ங்க ஐயா!' என்றான்.சேகர் தன் பையிலிருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டுக் கட்டை எடுத்து எண்ணி, கதிரவனிடம் கொடுத்தார். கதிரவன் அதை வாங்கி கல்லாவில் வைக்கும் முன்பாக எண்ணினான். பதினாறாயிரத்து முந்நூறு ரூபாய் இருந்தது. ஐந்நூறு ரூபாய் அதிகம்.'ஐயா, ஐந்நூறு ரூபாய் அதிகமா இருக்கு' என்றான் கதிரவன் வியப்புடன்.சேகர் புன்னகைத்தார். 'அப்படியா தம்பி? அவசரத்துல எண்ணிட்டேன்' என்று கூறிவிட்டு, ஒரு ஐந்நூறு ரூபாய் தாளைப் பெற்றுக் கொண்டு பொருள்களுடன் கிளம்பினார்.அவர் சென்றதும் கதிரவன், 'பாத்தீங்களாப்பா, இவ்வளவு பெரிய பணக்காரர், கணக்குல இவ்வளவு கவனக்குறைவா இருக்காரே!' என்றான்.ஞானமுத்து பலமாகச் சிரித்தார். 'தம்பி கதிர்! அவர் அவசரத்துல தப்பு பண்ணல. உன்னைச் சோதிச்சுப் பாக்கத்தான் வேணுமனே அதிகமா கொடுத்தார்!''என்னப்பா சொல்றீங்க?' என்று கதிரவன் அதிர்ந்தான்.'ஆமாம்பா. சேகர் ஐயா நம்ம கடைக்கு புதுசா வர்ற ஆள் இல்லை. இருபது வருஷ வாடிக்கையாளர். இன்னைக்கு நீ புதுசா கல்லாவுல உட்கார்ந்திருக்கறதைப் பார்த்ததும், உன்னோட நேர்மை எப்படிப்பட்டதுன்னு சோதிக்கத்தான் அந்த அதிகப்படியான பணத்தைக் கொடுத்தார். நீ அதைத் திருப்பிக் கொடுத்ததும் அவர் முகத்துல ஒரு திருப்தி வந்துச்சு பாத்தியா? அதுதான் 'நம்பிக்கை'. இனிமே அவர் கண்ணை மூடிக்கிட்டு நம்மகிட்ட வியாபாரம் பண்ணுவார்.'கதிரவன் யோசனையில் ஆழ்ந்தான். 'அப்போ... நேர்மையானவங்களை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?''இப்போ சேகர் ஐயா செஞ்சாரே, இது ஒரு விதம். சில பேர் வேணும்னே அஞ்சு ரூபாய், பத்து ரூபாய் அதிகமா கொடுப்பாங்க. அதை நாமே கவனிச்சுத் திருப்பிக் கொடுத்தா, அவங்க மனசுல நம்ம கடைக்கு ஒரு தனி மரியாதை வந்துடும். அதேபோல, சில வாடிக்கையாளர்கள் நாம தப்பித்தவறி குறைவா காசு வாங்கிட்டாலும், 'தம்பி, நீங்க நூறு ரூபாய் கம்மியா வாங்கிட்டீங்க'ன்னு தேடி வந்து கொடுப்பாங்க. அவங்கதான் தங்கமான வாடிக்கையாளர்கள். அவங்களை நாம எப்பவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.''சரிப்பா, அப்போ கெட்ட வங்களை... அதாவது ஏமாத்துறவங்களை எப்படி அடையாளம் காண்றது?' என்று ஆர்வமாகக் கேட்டான் கதிரவன்.ஞானமுத்து கதிரவனின் தோளைத் தட்டினார். 'அது இன்னும் சுலபம். சிலபேர் கடைக்கு வரும்போதே ரொம்பப் படபடப்பா வருவாங்க. நாலு பொருளைக் கேட்டுட்டு, நம்ம கவனத்தைத் திசைதிருப்பி ஏதாச்சும் ஒரு பொருளை பில் போடாமா எடுத்துக்கப் பார்ப்பாங்க. இன்னும் சிலபேர், போன மாசம் காசு கொடுத்தாச்சுன்னு பொய் சொல்லுவாங்க. அதனாலதான் வியாபாரத்துல 'வரவு-செலவு' கணக்கை உடனுக்குடன் எழுதி வைக்கணும்.'மேலும் தொடர்ந்தார், 'வாடிக்கையாளர்களிடம் கனிவா நடந்துக்கணும். ஆனா, அதே சமயம் எச்சரிக்கையாவும் இருக்கணும். ஒருத்தரோட பேச்சு, அவங்க பொருளைத் தேர்ந்தெடுக்குற விதம், பணத்தைக் கொடுக்கும்போது அவங்க கண்ணுல இருக்குற தயக்கம்... இதெல்லாம் கவனிச்சா அவங்க நல்லவரா, கெட்டவரான்னு தெரிஞ்சுடும். நியாயமான வாடிக்கையாளர்தான் ஒரு கடைக்குத் தூண் போன்றவர்கள். அவங்களை அடையாளம் கண்டு, அவங்களுக்குக் கூடுதல் மதிப்புக் கொடுக்கணும்.'அப்போது ஒரு ஏழைத் தாய் தன் குழந்தையுடன் கடைக்கு வந்தாள். நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு, குழந்தைக்குத் தேவையான பிஸ்கட் பாக்கெட்டையும், கொஞ்சம் பருப்பையும் கேட்டாள். கதிரவன் பில் போட்டபோது நூற்று பத்து ரூபாய் வந்தது.அந்தத் தாய் தயங்கி, 'தம்பி, பருப்பு கொஞ்சம் குறைச்சுக்கோங்க, என்கிட்ட நூறுதான் இருக்கு' என்றாள்.கதிரவன் அப்பாவைப் பார்த்தான். ஞானமுத்து, 'முடிவு உன் விருப்பம்' என்று ஜாடை காட்டினார்.'பரவாயில்லைம்மா... பருப்பு அப்படியே இருக்கட்டும். மீதிப் பத்து ரூபாயை அடுத்த முறை வரும்போது கொடுங்க...' என்று கதிரவன் கனிவோடு கூறினான். அந்தத் தாயின் முகத்தில் ஒரு நிம்மதிப் புன்னகை பூத்தது.அவர்கள் சென்றதும் ஞானமுத்து சொன்னார், 'இப்போ நீ செஞ்சியே, இதுதான் வியாபாரத்தோட ஆகச் சிறந்த நுணுக்கம். இவங்க ஏமாத்துறவங்க இல்லை. சூழ்நிலை அவங்களை அப்படி வைச்சிருக்கு. இப்போ நீ கொடுத்த இந்த பத்து ரூபாய் சலுகை, அவங்களை வாழ்நாள் முழுக்க நம்ம கடையோட நிரந்தர வாடிக்கையாளரா மாத்திடும்!'கதிரவன் புன்னகைத்தான். அவனுக்குப் புரிந்தது... வியாபாரம் என்பது வெறும் லாப நஷ்டக் கணக்கு மட்டுமல்ல, அது மனித மனங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு வாழ்வியல் பாடம் என்று!