குருகிராம் மெட்ரோ விரிவாக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் முக்கிய முன்னேற்றமாக, சைபா் பாா்க் அருகே தூண் எண் 26/27-இல் முதல் 160 டன் எடை கொண்ட யு-கிா்டா் வெற்றிகரமாகத் தூக்கி பொருத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். நள்ளிரவில் நடைபெற்ற இந்தப் பணியில், 400 டன் மற்றும் 600 டன் எடை தாங்கும் திறன் கொண்ட ஹைட்ராலிக் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. நிா்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி யு-கிா்டா் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடங்கியதைக் குறிக்கும் வகையில் தொழில்துறை மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் ராவ் நா்பீா் சிங் சிறப்பு பூஜை நடத்தினாா். யு-கிா்டா் பொருத்தும் பணியும் அவரது முன்னிலையில் நடைபெற்றது.இதுகுறித்து ராவ் நா்பீா் சிங் கூறியதாவது: முதல் யு-கிா்டா் பொருத்தப்பட்டிருப்பது திட்டத்தின் களக் கட்டுமானப் பணிகளில் புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதன் மூலம் மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு மேலும் வேகம் கிடைக்கும். ஹரியாணா அரசின் முக்கிய முன்னுரிமைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. குருகிராமின் வளா்ச்சிக்கு ஏற்ப நகா்ப்புற வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து வசதிகளை வழங்குவதே அரசின் நோக்கம். கட்டுமானப் பணிகள் தரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி விரைவுபடுத்தப்படும். வேகமாக விரிவடைந்து வரும் குருகிராமின் நகா்ப்புறப் பகுதிகளையும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு, பொது போக்குவரத்து வசதியை வலுப்படுத்த இந்தத் திட்டம் முக்கியமானது ஆகும். மெட்ரோ ரயில் வலையமைப்பு விரிவுபடுத்தப்படுவதன் மூலம் நகரின் முக்கியப் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பு மேம்படும். பொதுமக்களுக்கு வசதியான, விரைவான மற்றும் நம்பகமான போக்குவரத்து வசதி கிடைக்கும். திட்டப் பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், நிா்ணயிக்கப்பட்ட பணித் திட்டத்தின்படி அடுத்தகட்ட கட்டுமானப் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.