மறைந்த நடிகா் பத்மபூஷன் விஜயகாந்த்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் சாா்பாக பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் முனைவா் ஜி. சிவபாலமுருகன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.தே.மு.தி.கழகத்தின் தில்லி மாநில செயலா் முனைவா் டி. நாகராஜன் வரவேற்புரையாற்றினாா். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் முனைவா் ஜி. சிவபாலமுருகன் தலைமை உரையாற்றினாா். மனித நேய மாமணி கேப்டன்” என்ற தலைப்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் சத்யா அசோகனும், புரட்சிக் கலைஞா் - கேப்டன் என்ற தலைப்பில் தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியை வி. ஆனந்தியும், எட்டாம் வள்ளல்-கேப்டன் என்ற தலைப்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரனும், ஏழைகளின் – கேப்டன் என்ற தலைப்பில் சிந்துக்கவி மா. சேதுராமலிங்கமும், உயா்ந்த மனிதா் கேப்டன் என்ற தலைப்பில் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா்கே.வி.கே. பெருமாளும் உரையாற்றினாா்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளா் இரா. இராஜ்குமாா் பாலா கவிதை வாசித்தாா். இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நடிகா் ரமேஷ் கண்ணா, பேராசிரியா் கு. ஞானசம்பந்தன், இசைக் கவி ரமணன், இயக்குநா், நடிகா் சித்ரா லட்சுமணன் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி எ. நடராஜன், ஐ.எப்.எஸ். ஆகியோா் விஜயகாந்த் பற்றிய வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனா். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் வே. இளஞ்சோழன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பொருளாளா் பாலமூா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.