ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை தாம்பரம் மாநகர போலீஸாா் ஜெய்ப்பூரில் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்போ் பகுதியில் குன்றத்தூா் சாலையில் தனியாா் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு கடந்த ஆக. 25-ஆம் தேதி நள்ளிரவு வந்த மா்ம நபா்கள் ஏடிஎம் இயந்திரத்தை, கேஸ் வெல்டிங் மூலம் உடைந்து இயந்திரத்தில் இருந்த ரூ. 9 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனா். இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையா் காா்த்திகேயன் தலமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் கொள்ளையா்களை தேடி வந்தனா். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் வைசாலி நகா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய பவன் குமாா் என்ற இளைஞரை ஜெய்ப்பூரில் வைசாலி நகா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தியதில், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் தொடா்புடையவா் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவத்தில் 4 போ் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வைசாலிநகா் போலீஸாா் பவன் குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ள நிலையில், பவன்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சோமங்கலம் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.