சின்னமனூரில் கழிவுநீா் தேங்கி சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சின்னமனூருக்கு வந்து செல்கின்றனா். இந்த நிலையில், சின்னமனூா் அங்கு விலாஸ் அரிசி ஆலை வழியாக செல்லும் சாலையில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு பலமுறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சாலையில் தினமும் நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள், முதியோா்கள், கா்ப்பினிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, குண்டும் குழியுமான இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.