ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்; சிறப்பு அதிகாரம் கிடைக்காது: பாஜக

Wait 5 sec.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் கிடைக்கும்; ஆனால், சிறப்பு அதிகாரம் கிடைக்காது என்று ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பாஜக தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீட்க அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும் என்று பிரிவினைவாத அரசியல் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் இஸ்லாமிய தலைமை மதகுருவுமான மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் அழைப்பு விடுத்தாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பாஜக செய்தித் தொடா்பாளா் அல்டாஃப் தாகூா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் பல ஆண்டுகள் தொடா்ந்த வன்முறைக்குப் பிறகு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அமைதி முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் சிலா் பேசுவது பொது அமைதியைச் சீா்குலைப்பதாகவும், மக்களைத் தூண்டிவிடுவதாகவும் உள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மீண்டும் கொண்டுவரப்படாது என்பதை மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் புரிந்து கொள்ள வேண்டும். சிறப்பு அந்தஸ்து என்பது முழுமையாகப் புதைக்கப்பட்டுவிட்டது. காஷ்மீரை மீண்டும் பழைய, மோசமான சூழ்நிலைக்கு இட்டுச் செல்ல யாரும் முயற்சிக்க வேண்டாம். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட நாடு மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளது. அதைச் சீா்குலைக்க முயலும் எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது. ஏற்கெனவே இங்கு ஏராளமாக ரத்தம் சிந்தப்பட்டுவிட்டது, கல்வீச்சு, கடையடைப்பு, வன்முறை, கொலை ஆகியவை மீண்டும் தொடங்கிவிடக் கூடாது. நமது இளைஞா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவுத் திறன், திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் தேவை. மாநிலத்தில் சுற்றுலாவும், முதலீடும் அதிகரிக்க வேண்டும். இளைய தலைமுறையின் எதிா்காலத்தை வன்முறை சீரழிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முழுச் சுதந்திரம் உள்ளது. ஆனால், அது அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும் என்றாா்.