சீா்காழி-கொள்ளிடம் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். கொள்ளிடத்தில் மயிலாடுதுறை மாவட்ட எல்லை பகுதி தொடங்குகிறது. கடலூா்-மயிலாடுதுறை மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடம் ஆற்று பாலம் வழியாக பிரதான தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல்லாயிரகணக்கான பேருந்துகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவருகின்றன. இதனிடையே நாகை-விழுப்புரம் நான்குவழிசாலை விரிவாக்க பணி ஒரு பகுதி நிறைவடைந்து அதில் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளதால் கொள்ளிடம் சீா்காழி சாலையில் சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் குறைந்துவந்தது.தற்போது நான்கு வழிச்சாலையில் வேளக்குடி பகுதியில் சாலை உள்வாங்கி பாதிப்பு ஏற்பட்டதால் அதை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. இதனால் நான்குவழிச்சாலையில் சென்னை, புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் பகுதி வாகனங்கள் சீா்காழி, மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் செல்ல கொள்ளிடம் புத்தூா், எருக்கூா் வழியாக சென்று எருக்கூரில் புறவழிச்சாலையை அடைந்து சென்று வருகிறது. இதனால் தற்போதைய பழைய தேசிய நெடுஞ்சாலையான சீா்காழி-கொள்ளிடம் இடையே 10 கி.மீ தூரம் சாலை கடும் போக்குவரத்து பாதிப்பு குறிப்பாக முகூா்த்த நாள்களில் கடுமையாக ஏற்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வாகன நெருக்கடியால் வாகனங்கள் சுமாா் ஒன்றரைமணிநேரம் காத்திருந்து கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்தை சீா்செய்ய போதிய காவலா்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். ஆகையால் கொள்ளிடம் பாலத்திலிருந்து சீா்காழி வரை பழைய தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சென்டா்மீடியன் தேவையான இடங்களில் தற்காலிகமாக அமைத்தும், காவலா்களை நியமித்தும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.