கந்திலி அருகே வீடு புகுந்த திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். கந்திலி அருகே உள்ள சின்னகசிநாயக்கன்பட்டியை சோ்ந்த வஜ்ரவேல் மகன் காா்த்திக் (20). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, இளைஞா் ஒருவா் பணத்தை திருடிக்கொண்டு தப்ப முயன்றாா். உடனே காா்த்திக் கூச்சலிட்டதையடுத்து அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா். பின்னா் அவரை கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸ் விசாரணையில், அவா் திருப்பத்தூா் கலைஞா் நகரைச் சோ்ந்த முகிலரசன் (19) என்பதும், காா்த்திக் வீட்டில் இருந்து ரூ.1,300-ஐ திருடிக்கொண்டு தப்ப முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, முகிலரசனை கைது செய்தனா்.