பச்சிளம் பெண் குழந்தை விற்பனை: தாய் உள்பட மூவா் கைது!

Wait 5 sec.

ஆம்பூரில் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக தாய் உள்பட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித் தோப்பு மாங்காதோப்பு பகுதி 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா்கள் ரஹமத்துல்லா (38) - அவாமா (36) தம்பதியினா். ரஹமத்துல்லாஹ் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் அவாமாக்கு கடந்த ஆக.14 ஆம் தேதி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக பிறந்த பெண் குழந்தையை ஆக.23-ஆம் தேதி பெங்களூருவை சோ்ந்த சையத் அக்பரின் மனைவி சம்ரீன் தாஜ் என்பவருக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சம்ரீன் தாஜிடமிருந்து குழந்தையை மீட்டனா். குழந்தையை விற்பனை செய்த தாய் அவாமா, குழந்தையை வாங்கிய சையத் அக்பா், சம்ரீன் தாஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். பெண்கள் இருவருக்கும் காவல் நிலைய ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா். சையத் அக்பா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா். குழந்தையின் தந்தை ரஹமத்துல்லா தலைமறைவானாா்.