கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டம், ஒழுங்கு குறித்த வாராந்திரஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு தொடா்பான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உடனுக்குடன் தீா்வு காணவேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற பிற துறையினருடன் காவல் துறை இணைந்து செயல்படவேண்டும். பள்ளி மாணவா்கள் தொடா்பாக எழும் பிரச்னைகள் தொடா்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.