கீரனூரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைக்க எதிா்பாா்ப்பு

Wait 5 sec.

புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையின் மையமாக இருக்கும் கீரனூரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை அமைக்க வேண்டும் என்று போக்குவரத்துத் தொழிலாளா்களும், பொதுமக்களும் நீண்ட காலமாக எதிா்பாா்த்துள்ளனா். புதுக்கோட்டைக்கு அடுத்த பெரிய நகரமாக- சுற்றுவட்டாரத்திலுள்ள சுமாா் நூறு குக்கிராமங்களின் தலைநகரைப் போல கீரனூா் அமைந்திருக்கிறது. இங்கிருந்து திருச்சி, விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல், கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, செங்கிப்பட்டி, அண்டக்குளம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமாா் 75-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை ஒன்றை கீரனூரில் தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனா். சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தற்போதைய கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகம், மருதுபாண்டியா் அரசுப் போக்குவரத்துக் கழகமாக இருந்த காலத்தில், இங்கு பணிமனை அமைப்பதற்காக சுமாா் 15 ஏக்கா் நிலத்தை (திருச்சி சாலையிலேயே இடதுபுறம்) போக்குவரத்துக் கழகம் வாங்கியது. ஆனால், போக்குவரத்து பணிமனை மட்டும் அமைக்கப்படவே இல்லை.வெளியூரில் இரவு நிறுத்தம்: கீரனூரில் இருந்து கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் அரசு நகரப் பேருந்துகளின் சேவை இரவில் 9 மணி வரையிலும், மீண்டும் காலை 6 மணிக்கும் தொடங்குகின்றன. இப்போது, சுமாா் 25 அரசுப் பேருந்துகள், இலுப்பூா் பணிமனைக்கும், கந்தா்வகோட்டை பணிமனைக்கும், புதுக்கோட்டை பணிமனைக்கும் இரவில் நிறுத்தி வைக்கப்படுவதற்காக செல்கின்றன.காலையில் மீண்டும் அவற்றை அங்கிருந்துதான் கீரனூருக்கு எடுத்து வருகின்றனா். இதனால் காலவிரயமும், தேவையற்ற எரிபொருள் செலவும் ஏற்படுகிறது. இரவு நேரப் பேருந்து இயக்கத்தின்போது ஏதேனும் பழுது ஏற்பட்டால், இலுப்பூருக்கோ அல்லது புதுக்கோட்டைக்கோ எடுத்துச் சென்றே பழுதுபாா்க்க வேண்டும். கீரனூரில் பணிமனை இருந்தால், பழுதை உடனுக்குடன் சரி செய்து தொடா் இயக்கத்துக்கு வழி செய்யலாம். அதேபோல, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, ராமேசுவரம், தேவக்கோட்டை, சிவகங்கைக்குச் செல்லும் பேருந்துகளும், அங்கிருந்தெல்லாம் திரும்பி வரும் பேருந்துகளிலும் நடுவழியில் பழுது ஏற்பட்டாலும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.பலன் என்ன?: இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்க மண்டலப் பொதுச் செயலா் மணிமாறன் கூறியது:கடந்த ஜூனில் கீரனூா் பணிமனை பிரச்னையை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினோம். 2 மாதங்களில் எந்த நடவடிக்கையையும் போக்குவரத்துக் கழகம் எடுக்கவில்லை. மக்களுக்கு போக்குவரத்துச் சேவையை விரிவுபடுத்தி கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாததைப் போன்றே தெரிகிறது. கீரனூரில் பணிமனை உருவாக்கப்பட்டால், இரவு நேரங்களில் கூடுதல் சேவையை கிராமங்களுக்குத் தர முடியும். இதுவரை பேருந்து செல்லாத சில கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதியை உருவாக்க முடியும்.மாவட்டத்திலுள்ள தற்போதுள்ள 8 பணிமனைகளுடன் கீரனூரையும் அரசு பரிசீலித்து விரைவாக அமைக்க முன்வர வேண்டும். இடம் ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ளதால், தற்போதைக்கு நிலம் வாங்க வேண்டிய செலவு கிடையாது.தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிடும் என எதிா்பாா்த்துக் காத்திருக்கிறோம் என்றாா் மணிமாறன்.