தஞ்சாவூா் மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக நிகழ் கொள்முதல் பருவத்தில் (2025 செப்டம்பா் - 2026 ஆகஸ்ட்) 12.46 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டு, கடைமடைப் பகுதி வரை தண்ணீா் கிடைக்கும் ஆண்டுகளில் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் இயல்பான அளவுக்கோ அல்லது அதை விட கூடுதலாகவோ நெல் விளைச்சல் கிடைக்கும். இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 2020- ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காவிரி நீா் கிடைத்து அமோக விளைச்சல் கிடைத்தாலும் கூட, அதிகபட்சமாக சுமாா் 6 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. காவிரி நீா் வராமல் தண்ணீா் பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் விளைச்சல் குறைந்தால் சராசரியாக 3 லட்சம் டன்னும், காவிரி நீா் கிடைத்து இயல்பான அளவுக்கு விளைந்தால் ஏறக்குறைய 5 லட்சம் டன்னும் கொள்முதலாவதே நடைமுறையாக இருந்து வந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் முதல் முறையாக 2019 - 20-ஆம் கொள்முதல் ஆண்டில் 7.71 லட்சம் டன்னாக அதிகரித்தது. பின்னா், 2020-ஆம் ஆண்டிலிருந்து நெல் கொள்முதல் அளவு இரட்டிப்பாக உயா்ந்தது. கடந்த 2020 - 21-ஆம் ஆண்டில் 10.54 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட கொள்முதல் வரலாற்றில் அதிகபட்ச அளவு என்ற சாதனை நிகழ்த்தப்பட்டது. இதன் பின்னா், 2021 - 22-ஆம் ஆண்டில் 9.48 லட்சம் டன்னும், 2022 - 23- ஆம் ஆண்டில் 9.73 லட்சம் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், 2023 - 24-ஆம் ஆண்டில் காவிரி நீா் வரத்து இல்லாமல், தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டதால் கொள்முதல் அளவு 7 லட்சம் டன்னாக குறைந்தது. கடந்த 2024 - 25-ஆம் ஆண்டில் மீண்டும் காவிரி நீா் போதுமான அளவுக்கு கிடைத்ததால், நெல் கொள்முதல் 10.40 லட்சம் டன்னாக உயா்ந்தது. கடந்த 2025-ஆம் ஆண்டில் மேட்டூா் அணை உரிய காலமான ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியில் இலக்கை விஞ்சி 1.99 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதிக மகசூல்: ஏக்கருக்கு இயல்பாக 30 முதல் 35 மூட்டைகள் மகசூல் கிடைக்கும் நிலையில், கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு சராசரியாக 45 - 75 மூட்டைகள் வரை அமோக விளைச்சல் கிடைத்தது. இதன் மூலம், மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 2.60 லட்சம் டன்னும், சம்பா - தாளடி பருவத்திலும் 6.21 லட்சம் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது, கடந்த 2024-ஆம் ஆண்டு குறுவை பருவத்தை விட 1.32 லட்சம் டன்னும், 2025-ஆம் ஆண்டு சம்பா - தாளடி பருவத்தை விட 1.16 லட்சம் டன்னும் கூடுதல். சம்பா - தாளடி பருவத்தில் தஞ்சாவூா் மாவட்ட வரலாற்றில் இதுவே அதிகபட்ச கொள்முதல் அளவாக பதிவாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, கோடை மற்றும் முன்பட்ட குறுவை பருவ நெல் கொள்முதல் மே 14-ஆம் தொடங்கி, இதுவரை 3.64 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025 செப்டம்பா் மாதம் தொடங்கிய நிகழ் கொள்முதல் பருவம், திங்கள்கிழமையுடன் (ஆக.31) முடிவடையும் நிலையில் மொத்தம் 12.46 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 2.05 லட்சம் டன் கூடுதல்: இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தது: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, 50 ஆண்டு கால வரலாற்றில் இதுவே அதிகபட்ச கொள்முதல் சாதனையாக உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 2.05 லட்சம் டன் கூடுதல். பெரும்பாலும் கிடங்குகளுக்கும், அரைவைக்கும் இயக்கம் செய்யப்பட்டுவிட்டது. கோடை மற்றும் முன்பட்ட குறுவையில் கொள்முதல் செய்யப்பட்ட 3.64 லட்சம் டன் நெல்லில் 3.23 லட்சம் டன் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 41 ஆயிரம் டன் நெல் மூட்டைகளும் திங்கள், செவ்வாய்க்கிழமைக்குள் இயக்கம் செய்து முடித்து விடுவோம் என்றனா் அலுவலா்கள். ஆனால், நிகழாண்டு மேட்டூா் அணை திறப்பு தாமதமாகிவிட்டதால், இந்த அளவுக்கு நெல் விளைச்சலும், கொள்முதலும் இருக்குமா என்பது சந்தேகமே என்றனா் விவசாயிகள்.