மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற 10 நாள்களுக்குள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்தனர். ஆகஸ்ட் 16 அன்று கோரா திலா பகுதிக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நால்வர் குளித்துள்ளனர். அதன்பிறகு காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. பாதிக்கப்பட்ட நால்வரின் உடல்நிலையும் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் மோசமடைந்தது. குடும்பத்தினரின் தகவலின்படி, அகமதுவின் 14 வயது மகன் தாஹிர் ஆகஸ்ட் 18 அன்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவரது ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்ததையடுத்து 2 நாள்களுக்குள் அவர் உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து குடும்பத்தினர் மீள்வதற்கு முன்பே, அகமதுவின் சகோதரியின் 19 வயது மகனான அயாஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிவபுரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததையடுத்து குவாலியருக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 23ல் அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, அகமதுவின் இளைய மகன்களான தருஃப் (9) மற்றும் தாசிஃப் (11) ஆகியோருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர்களது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகஸ்ட் 31 அன்று காலையில் தருஃப், அதே நாள் மாலையில் அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்தார்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது வழக்கத்திற்கு மாறான ஒன்று. இதுகுறித்து நிர்வாகமும், சுகாதாரத் துறையும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் ரிஷிஷ்வர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் தொற்றுநோய் காரணமாகவே நால்வரும் உயிரிழந்திருக்கலாம். இதுவரை உடற்கூராய்வு நடத்தப்படவில்லை, இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறினார்.