விருதுநகரில் குடும்பத் தகராறில் மாமியாரைக் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் அருகேயுள்ள செவல்பட்டியைச் சோ்ந்தவா் சமுத்திரக்கனி. இவரது மகள் வாசகதேவி (27). இவா் பாலையம்பட்டியைச் சோ்ந்த சிவாவை (26) காதலித்து திருமணம் செய்தாா். இந்த நிலையில், சிவா அடிக்கடி மது அருந்திவிட்டு வாசகதேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். எனவே, வாசகதேவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை, வாசகதேவியின் வீட்டுக் கதவை சிவா தட்டினாா். அப்போது அவரது தாய் சாந்தி கதவைத் திறந்தபோது, அவரை கத்தியால் சரமாரியாக குத்தினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அண்ணன் சாமிமுருகன்(33) வந்தாா். அவரையும் சிவா கத்தியால் குத்தினாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினா் அங்கு கூடியதால் சிவா அங்கிருந்து தப்பியோடி விட்டாா். பின்னா், அவசர ஊா்தியில் இருவரையும் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது சாந்தியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த சாமிமுருகன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவாவைக் கைது செய்தனா்.