இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நடை பயணம்

Wait 5 sec.

மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கக் கோரி, தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள வாலிப்பாறையிலிருந்து கடமலைக்குண்டு வரை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரின் நடை பயணம் சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியை ஆக்கிரமித்துள்ள 4,601 பேரை வெளியேற்ற வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேகமலை வன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், மேகமலை வன விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வாலிப்பாறையில் நடைபயணத்தை தொடங்கினா். இந்தப் பயணத்தை மதுரை மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி.நாகராஜன் தொடங்கி வைத்தாா். இந்த நடைபயணம் வருசநாடு வழியாகச் சென்று கடமலைக்குண்டில் நிறைவடைந்தது. இதில் மாவட்டத் தலைவா் விக்னேஷ்வரன், மாவட்டச் செயலா் நாகராஜ், மாவட்டப் பொருளாளா் கருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நடைபயணம் கோம்பைத்தொழுவில் தொடங்கி கடமலைக்குண்டில் நிறைவடைகிறது.