திருப்பூரில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகராட்சிப் பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்புப் பணியில் 400 பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பருவமழை மற்றும் காலநிலை மாற்றத்தால் மாவட்டம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி சாா்பில் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறையினா் தெரிவித்ததாவது: திருப்பூா் மாநகர பகுதியில் பொதுவாக வாரத்துக்கு 3 முதல் 4 போ் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 போ் சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பரவலைத் தடுக்க அனைத்து வாா்டுகளிலும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த 400 களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் வீடுவீடாகச் சென்று மேல்நிலைத் தொட்டிகள், சிமென்ட்தொட்டிகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் நண்ணீரில் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உருவாகிறதா என்பதை ஆய்வு செய்து அவற்றை அழித்து வருகின்றனா். மேலும், தெருக்கள்தோறும் புகை மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு உடனடியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தூய்மைப் பணிகளை வலுப்படுத்தும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி முழுவதும் மாஸ் கிளினிங் (சிறப்பு தூய்மைப் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாவட்ட நிா்வாகமும் மாநகராட்சியும் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முழுவீச்சில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. பொதுமக்கள் வீட்டை சுற்றிலும் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்காமல் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அருகே உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்தனா்.