அரிதானதொரு வாழ்க்கை

Wait 5 sec.

அரிதானதொரு வாழ்க்கை- கோகிலா; பக்.128; ரூ. 190; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை- 600 083. ✆ 75500 98666.சங்க இலக்கியங்கள், இதிகாசங்களில் பெண்களைப் பெருமைப்படுத்தியும், போற்றியும் கதைகளும், காவியங்களும் வரையப்பட்டன. ஆனால், பின்னாளில் சமுதாயத்தாலும், சொந்த குடும்பத்தாராலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். இதனால், அவர்களது உரிமைகளும், பெருமைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள், சமூக வளர்ச்சி, கலாசார, அறிவியல் மாற்றங்கள் என நாளடைவில் பெண்கள் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் என இந்த உலகு அறியத் தொடங்கியது.ஆண்கள் கால் தடம் பதித்த அனைத்து இடங்களிலும் தற்போது பெண்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தங்களது உரிமைகளைத் தெரிந்து கொண்டு பல்வேறு சமுதாய மாற்றங்களுக்கு வித்திட்டதுடன், அரசியல், தொழில், கல்வி, ஆராய்ச்சி என பல பரிமாணங்களில் அவர்கள் தடம் பதித்து வருகின்றனர்.ஆனால், வரலாறு ஆண்களை மட்டுமே பெருமைப்படுத்தி வந்துள்ளது. சமுதாயத்தில் சாதனை அல்லது மாற்றத்தை ஓர் ஆண் நிகழ்த்தினால், அவருக்குக் கிடைக்கும் அங்கீகாரம், மரியாதையை பெண்கள் நிகழ்த்தினால் இந்த சமுதாயம் அவர்களுக்கு அளிக்க மறுக்கிறது.இருப்பினும், சமுதாயத்தில் முத்திரை பதித்த பெண்கள், அவர்கள் அதற்குப் பின்னால் சந்தித்த வலிகள், இடர்ப்பாடுகள், அவமானம், இழப்பு, துரோகம் ஆகியவை ஏனோ நமக்கு தெரியாமலும், புரியாமலும் இருந்திருக்கின்றன. உலக வரைபடத்தில் நமக்குத் தெரியாமல் சப்தமில்லாமல் ஏதோ ஓர் இடத்தில் இது போன்ற சாதனை படைத்த பெண்களின் வாழ்க்கையையும், அவர்களது பயணங்களையும் நிஜக் கதாநாயகிகளாக சிலர் ஆவணப்படுத்தியுள்ளனர்.60 வயதில் நீச்சல் கனவை மீட்டெடுத்து சாதனை படைத்த பெண், குடும்ப வன்முறை, போர்ச் சூழலுக்கு இடையே சாதித்த பெண் எனப் பல்வேறு வாழ்க்கைப் பின்னணி கொண்ட பெண்களின் காட்சிப்படுத்தப்பட்ட தொகுப்புகள் குறித்து எழுத்தாளர் கோகிலா பதிவு செய்துள்ளார்.