மனசுக்குள்ளே ஒரு ஜென் பயணம்! - ந. ஸ்ரீதர்; பக். 224; ரூ. 230; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017. ✆ 044- 2434 2926.ஜென் தத்துவம் என்பது எளிமையானது; ஆனால், ஆழமானது. குருவின் வழிகாட்டுதலுடன் இந்த ஜென் தத்துவத்தை நாம் பயிற்சி செய்து அதன் சாராம்சத்தை உணர்ந்து, அதை அனுபவித்து வரும்போது கிடைக்கும் ஆனந்தம் எதற்கும் ஈடில்லாதது.மனதைக் கட்டுப்படுத்த முடியாது. அதைப் பிடிக்க நினைத்தால் அது ஓடிவிடும்; அடக்க நினைத்தால் மீறிவிடும். ஆனால், அதை நாம் கவனித்தால் அப்படியே நிற்கும்; நின்ற மனது மூச்சை நீளமாக்கி, ஆழமாக்கும்; அந்த மூச்சுதான் நம்மை அக்கணப் பொழுதில் வாழ வைக்கும். இந்த விளக்கங்கள் எல்லாம் இந்த நூலை வாசிக்கும்போது நமக்குப் புலப்படும்.நமது மனது ஒரு 'மடிக்கணினி' என்றால், நமது ஆழ்மனம் 'நாசாவின் சூப்பர் கம்ப்யூட்டர்' என ஆழ் மனதும் உள்ளுணர்வும் குறித்து எளிமையாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் ஜென் குறித்த கருத்துகளை எடுத்தியம்புகிறார் அவர்.மூச்சை உள்ளிழுக்கும்போது நல்லவற்றை உள்ளிழுத்து, வெளியேற்றும்போது அல்லவற்றை வெளியேற்றுவது என்ற உச்சபட்ச ரகசியம் சாதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஹார்மோன்களையும் அதன் செயல்பாடுகளையும் ஓர் அரசுடன் ஒப்பிட்டு அதன் துறைகளுடன் இணைத்து விவரித்து இருக்கும் விதம் அற்புதம்.ஓர் அத்தியாயத்தை நாம் வாசிக்கும்போது நாமாகவே சற்று நிறுத்தி சற்று மனத்தைக் கவனிக்கத் தொடங்குகிறோம். பின்பு தொடர்ந்து வாசிக்கும்போது, அந்த இடத்தில் ஆசிரியர் நம்மை 'இப்போது வாசிப்பை நிறுத்தி சற்று ஓய்வு எடுங்கள்' என்று பதிவிட்டிருப்பது வியப்பாக இருக்கிறது.ஜென் குறித்து உணர்ந்தவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு மீள் பதிவை வாசிப்பதாக அமையும்; ஜென் குறித்து அறியாதவர்களுக்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துதலாக அமையும்.