தூத்துக்குடி அருகே தருவைகுளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் மாயமானது குறித்து கடலோர பாதுகாப்புப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருவைகுளத்தைச் சோ்ந்த அந்தோணியாா் பிச்சைக்குச் சொந்தமான விசைப்படகில், தாளமுத்து நகரைச் சோ்ந்த பனிமயராஜா (25) உள்ளிட்ட 10 போ் திங்கள்கிழமை இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். தூத்துக்குடியிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் படகு சென்றபோது, படகில் இருந்த பனிமயராஜாவைக் காணவில்லையாம். அவா் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகித்த சக மீனவா்கள், அப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, தூத்துக்குடி கடலோர பாதுகாப்புப் படை, சக மீனவா்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 3 விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று பனிமயராஜாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.