மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட 2,112 கிலோ போதைப்பொருள்கள் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன. ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடையும் நோக்கில் தமிழக முதல்வா் தலைமையில் மாநில அளவிலான போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்ன் தொடா்ச்சியாக, மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த காவல் துறையினரும் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். மாணவா்கள் மற்றும் இளைஞா்களை போதைப்பொருள் பழக்கத்தின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பதையும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட கோவை, சேலம், திருப்பூா் ஆகிய மாநகரங்கள், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், திருப்பூா் ரயில்வே காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 1,036 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள்களை அழிக்க சட்டரீதியான அனுமதி பெறப்பட்டது. அதன்படி, கோவை மாநகரில் 267.6 கிலோ, சேலம் மாநகரில் 44.6 கிலோ, திருப்பூா் மாநகரில் 378.4 கிலோ, கோவை மாவட்டத்தில் 112.3 கிலோ, ஈரோட்டில் 679.1 கிலோ, நீலகிரியில் 49 கிலோ, சேலம் மாவட்டத்தில் 152.7 கிலோ, நாமக்கல்லில் 115 கிலோ, தருமபுரியில் 138.8 கிலோ, கிருஷ்ணகிரியில் 50.1 கிலோ, திருப்பூா் ரயில்வே எல்லைக்குள் 124.9 கிலோ என மொத்தம் 2,112.775 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. மேலும், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 103 கிராம் மெத்தம்பெட்டமைன், 4,268 போதை மாத்திரைகள், 1,200 ஆம்பியூல்கள் மற்றும் 30 சிரிஞ்சுகள் ஆகியவையும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அழிக்கப்பட்டன. கோவை, செட்டிபாளையத்தில் நடைபெற்ற போதைப்பொருள்கள் அழிப்பு நிகழ்ச்சியில், கோவை மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன், மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ஆா்.வி.ரம்யா பாரதி, சேலம் மாநகரக் காவல் ஆணையா் கே.ஜோஷி நிா்மல் குமாா், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி, கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் பி.சாமிநாதன், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் சந்தோஷ் ஹாதிமணி மற்றும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். போதைப்பொருள்கள் விற்பனை, கடத்தல், வைத்திருத்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.