ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவரக் கோரி அவரின் மகள் அனிதா பி. ஃபாஃப் தாக்கல் செய்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேதாஜி காணாமல் போனது குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. அவரது எச்சங்கள் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் பாதுகாக்கப்படுவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ‘டோக்கியோவின் ரெங்கோஜி கோயிலில் உள்ள நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டுவர உத்தரவிடக் கோரி நேதாஜியின் பேரன் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், ‘இந்த கோரிக்கை தொடா்பாக நேதாஜியின் மகள் எங்கள் முன் ஆஜராகவில்லை. வாரிசு என்ற முறையில் அஸ்தியை நாட்டுக்கு கொண்டுவர விரும்பினால், அவா் நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டும். அப்போது, அவரின் உணா்வுகளை சட்ட நடவடிக்கையாக மாற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.அதைத் தொடா்ந்து, மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோரியதைத் தொடா்ந்து, அதற்கு அனுமதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.அதைத் தொடா்ந்து, நேதாஜியின் மகள் சாா்பில் இதுதொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது.அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘தனது தந்தைக்கு கண்ணியமான முறையில் இந்தியாவில் இறுதிச் சடங்கை செய்ய அவரின் மகள் விரும்புகிறாா். எனவே, அவரின் அஸ்தியை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.