என்னால் மறக்க முடியாத இசையமைப்பாளர் இவர்தான்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 8

Wait 5 sec.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 8.*எட்டாம் படிஅறிந்தோ அறியாமலோ நாளாக நாளாக சங்கீதம் என்பது தலை தடுமாறிப் போய் விட்டது. சினிமா சங்கீதம் மட்டுமல்ல; கர்நாடக சங்கீதத்தைத் தவிர, பாக்கி அனைத்துமே இலக்கணமில்லாமல் போய்விட்டன. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிக்கும் வேடிக்கையான இசைகளை இன்றைக்குக் கேட்கிறோம். இந்த இசைகளுக்கு எழுதப்படும் பாடல்களைப் படித்துப் பார்த்தால், உரைநடையைவிட இலக்கணம் இல்லாமல் இருக்கும்.இந்த இசைகளை எந்த வகைகளில் சேர்ப்பது? இந்தப் பாவத்தைத் தமிழ்நாடு மட்டும் செய்யவில்லை. உலகமே செய்து வருகிறது.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை. நல்ல கவிதைகள் எல்லாம், இசையாக மாறின.இந்தப் பணியில் என்னால் மறக்க முடியாத இசையமைப்பாளர், நான் அன்புடன் "மாமா" என்றழைக்கும் திரு. கே. வி. மகாதேவன் அவர்கள். சங்க காலத்து வார்த்தைகளை அப்படியே போட்டாலும், மகிழ்ச்சியோடு, அர்த்தம் புரிந்து அதற்கும் இசையமைத்தவர், அவர்.அவருடன் உதவியாளராக உள்ள திரு. புகழேந்தி தமிழறிவு மிக்கவர். செழுமையான வார்த்தைகளைக் கேட்கும்போது, அவற்றின் நயம் முறிந்து விடாமல் இசையமைப்பார்.இரண்டு வடமொழி வார்த்தைகள்.. அவற்றை முதலில் சொல்லி இருந்தால், இசையமைப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.''பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு / ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு / புரியாமலே இருப்பான் ஒருவன்" என்பதே அந்தப் பாடல்.என்னுடைய பாடல்களில் சுமார் ஆயிரம் பாடல்களுக்கு மாமா இசையமைத்திருக்கிறார். அவற்றிலே எண்ணூறு பாடல்களுக்கு மேற்பட்டவை, நான் எழுதிய பிறகே இசையமைக்கப்பட்டவை.'வானம்பாடி'யில் வரும், 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்'; 'ஏட்டில் எழுதி வைத்தேன்'; 'தூக்கணாங் குருவிக் கூடு': 'ஊமைப் பெண் ஒரு கனவு கண்டால்' - அனைத்துமே எழுதி இசையமைக்கப்பட்டவைதான். 'இரத்தத் திலகத்'தில் வரும், 'பசுமை நிறைந்த நினைவுகளே'; 'பனி படர்ந்த மலையின் மேலே' ஆகிய பாடல்களும் அப்படிப்பட்டவையே.சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பாடல்கள் தம்பி விஸ்வநாதனிடமும் ஏராளமாக உண்டு என்றாலும், பல நேரங்களில் அழகான தமிழ் வார்த்தைகளை அவன் ஒப்புக்கொள்வதில்லை.ஆயினும் அந்தக் காலங்களில் எழுதியவற்றைப் படித்துப் பார்த்தால், பெரும்பாலானவை பள்ளிக்கூடங்களில் பாடமாக வைப்பதற்குத் தகுதியுள்ளவையாகத் தோன்றுகின்றன.'காபரே' நடனம் என்று ஒன்று வந்து தமிழ்த் திரைப்பட உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகுதான், அலங்கோலமான இசை ஒன்று தமிழ்நாட்டிற்குள் புகுந்தது. அதன் பரிணாம வளர்ச்சியே இன்றைய சங்கீதம்! அந்த நாளில் கிராமிய இசைகூட கூடுமானவரை கிராமங்களில் கேட்கக் கூடியதாக இருந்தது. காரணம், தமிழ் "நாடோடி மெட்டு'களில் திரு. கே.வி. மகாதேவனுக்கும், விஸ்வநாதனுக்கும் அவ்வளவு பரிச்சயம் இருந்தது.ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும்.நானும், தம்பி விஸ்வநாதனும், தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும், அம்பிகாபதியும் சோவியத் ருஷ்யாவிற்குச் சென்றிருந்தபோது, 'லெனின் பல்கலைக் கழகத்'தில் ஒரு வரவேற்புக் கொடுத்தார்கள்.சோவியத் யூனியனில் முஸ்லீம்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், 'முஸ்லீம்கள்' என்று காட்டிக் கொள்வதில்லை. அவர்களிலே ஒரு முஸ்லீம் அந்த விழாவிலே 'டேப்' அடித்துப் பாடினார். அது மலையாளத்தில் மாப்பிள்ளை முஸ்லீம்களிடம் மிகவும் பிரபலமான மெட்டு. முஸ்லீம்கள் வாழும் எல்லா நாடுகளிலும் அந்த மெட்டு உண்டு போலிருக்கிறது.காயலரியகத்து வலையெறிஞ்ப் போழ் வலையிலுக்கிய சுந்தரி" - என்ற அந்தப் பாடல் கேரளமன்றி, தமிழ்நாட்டிலும் பிரபலமானது.அந்த மெட்டைக் கேட்டவுடனே விஸ்வநாதனும் நானும் ..... .... அந்த மெட்டுக்கு நான் அங்கேயே ஒரு பாடல் எழுதினேன். "வெள்ளி மாடத்துப் புள்ளி மானிடம் உள்ளம் வைத்தவன் யாரடி" - என்பது பல்லவி.விஸ்வநாதன் அந்தத் தோழரிடம் டேப்பை வாங்கிக்கொண்டு, அதே மெட்டில் இந்தப் பாடலைப் பாட ஆரம்பித்தான். மாணவ மாணவிகளின் ஆரவாரம் அடங்கப் பதினைந்து நிமிடம் பிடித்தது.எந்த இசையிலும் ஈடுபாடு இருந்ததால், அன்றைய இசையமைப்பாளர்கள் புதுவெள்ளம் ஒன்றைத் தந்துகொண்டிருந்தார்கள். அவை என் வாழ்வில் பொற்காலங்கள்.ஆயிரம் திரைப் பாடல்களை அச்சிட்டுப் பார்த்து, மேலும் இரண்டாயிரம் பாடல்கள் தொகுக்கப்பட்டதையும் பார்த்துவிட்டேன். எழுதியது ஐயாயிரம் என்றாலும், படித்தால் கவிதைபோல் இருப்பது ஆயிரம் இருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயத்தில் வரும், 'முத்தான முத்தல்லவோ' பத்து நிமிடத்தில் எழுதப்பட்டது; 'படிக்காத மேதை'யில் வரும், 'ஒரே ஒரு ஊரிலே ' பாதிப் பாட்டு, பாங்கிற்குப் போகும் அவசரத்தில் எழுதப்பட்டது; 'ஆலயமணி'யில் வரும் 'சட்டி சுட்டதடா' பல்லவி, 'எழும்பூர் கோர்ட்'டில் உருவானது; வேடிக்கையாகப் புகழ்பெற்றுவிட்ட 'எலந்தப் பழம்' நல்ல பசி நேரத்தில் எழுதப்பட்டது; 'காலங்களில் அவள் வசந்தம்', கீதை படித்தபோது தோன்றியது. பாண்டிச்சேரித் தேர்தலுக்கு அறிஞர் அண்ணா அவர்களோடு போனபோது, ஒரு மிக்சர் பொட்டலத்தின் எதிரொலி, 'அத்தான் என்னத்தான்'; மதுரைக்குப் போகும்போது, அதிகாலையில் கண் விழித்து, ரயிலில் கதவோரமாகச் சாய்ந்துகொண்டிருந்த வேளையில் அருள் வாக்காகத் தோன்றியது, 'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்' என்ற பாடல்.காமராஜரிடம் அதிக ஈடுபாடு கொண்டபோது, அந்த உணர்ச்சியில் பிறந்தது, 'கர்ணன்' படத்தில் வரும், 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடல்.இவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது. சுமார் இருநூறு பாடல்கள் இப்படிக் காரணத்தோடு பிறந்திருக்கும். மற்றவையெல்லாம் படத்திற்கென்று எழுதியவையே. - தொடரும்(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்) I can never forget this music composer: A series of articles by poet Kannadasanஎம்ஜிஆர் ஆசைப்பட்டதால் மதுரை வீரனுக்கு எழுதினேன்... கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!கருணாநிதியுடன் பகைமைக்குக் காரணம் என்ன? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 2மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 3இந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4கட்டபொம்மனைவிட வெள்ளையர்களை எதிர்த்தது மருதுபாண்டியரே! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 5இந்தப் படத்தில் அழுததுபோல் வேறெதிலும் நான் அழுததில்லை! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 6 பணத்தைச் சம்பாதிக்க எல்லோருக்கும்தான் தெரிகிறது! எவனுக்குக் கொடுக்கத் தெரிகிறது? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 7