தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் ச. ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களை நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற சூழலில் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்பிக்கள், திமுக, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களின் ஆதரவுடன் மசோதாவைத் தாக்கல் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்க எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை (ஆக. 8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆக. 12) புதன்கிழமை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.அதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் பேசுகையில், “நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும், வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும்” என்றார் முதல்வர் விஜய்.மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 543-ஆக நிரந்தரமாக்க வேண்டும், வரும் மக்களவை, பேரவைத் தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க உறுதி செய்ய வேண்டும்’ என மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஜோசப் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்ததைத் தொடர்ந்து, தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.Chief Minister S. Joseph Vijay moved a special resolution in the Legislative Assembly calling for the number of Members of Parliament (MPs) to be fixed permanently at 543.