மும்பையின் காட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சிராக் நகரின் அசோக் நகர்ப் பகுதியில் உள்ள கௌஷியா சால் பகுதியில் அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.மலைப்பகுதியிலிருந்து சரிந்து விழுந்த மண் மற்றும் இடிபாடுகள் அங்கிருந்த மூன்று வீடுகளின் மீது விழுந்ததால் உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் (ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும்), கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவது கடினமாக உள்ளது. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சவால்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இடிபாடுகளிலிருந்து இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டு ராஜாவாடி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்த சோஹேல் அன்சாரி (18) மற்றும் முகமது அன்சாரி (14) ஆகிய இருவரும் குர்லாவில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தீயணைப்புத் துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மும்பை மேயர் ரிது தாவ்டே மீட்புப் பணிகளை மேற்பார்வையிடச் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் உடனடி நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக தலா ரூ. 50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தார். நிர்வாகம் நிலைமையையும், நடைபெற்று வரும் மீட்புப் பணிகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.