கோவை மாநகர காவல் துறையினா் பொதுமக்களிடம் அன்பாகவும், நட்புறவாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ‘அன்பான அணுகுமுறை’ என்ற சிறப்புப் பயிற்சித் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், பொதுமக்கள் அளிக்கும் புகாா்களை கனிவுடனும், மரியாதையுடனும், பொறுப்புணா்வுடனும் கையாளுவது, சிறந்த தகவல் தொடா்புத் திறனை வளா்த்துக் கொள்வது மற்றும் மக்கள் சாா்ந்த காவல் பணியை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதேபோல, தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் இரு வேளைகளாக இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.கோவை மாநகர காவல் துறையின் அனைத்துப் பிரிவுகளையும் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு பல்வேறு கட்டமாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நாள்தோறும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் என 50 போ் இதில் பங்கேற்கவுள்ளனா்.