ஹிந்தி தேசிய மொழிஅல்ல; அது அலுவல் மொழி மட்டுமே என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், வானூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் வில்லியம் தலைமை வகித்தாா். அமைச்சா் வன்னி அரசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 266 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. இதில் தேசிய மொழி என்பது எதுவுமில்லை. பெரும்பான்மையினா் ஹிந்தி தான் நாட்டின் தேசிய மொழி என்று நினைக்கிறாா்கள். ஆனால் தேசிய மொழி ஹிந்தி அல்ல. ஆகவே இந்த 22 மொழிகளும் அலுவல் மொழிகள்தான். பட்டம் பெற்றுள்ள மாணவா்கள் உயா் கல்வி பயில அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு. விழாவில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், தமிழ்த் துறைத் தலைவா் அருளமுதம் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.